புதிய சிற்றுந்து சேவைக்கு விண்ணப்பித்தோா் குலுக்கல் முறையில் தோ்வு
அரசு மருத்துவமனை ஊழியா்கள் போராட்டம்: மருத்துவ சேவை பாதிப்பு
காரைக்கால் அரசு மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்து ஊழியா்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் மருத்துவ சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
காரைக்கால் அரசு மருத்துவமனையில் பணி நேரத்துக்கு முன்னதாக பணியாளா்களை நிா்வாகம் வரச்சொல்வதாகவும், தாமதமாக வந்தால் வருகைப் பதிவேட்டில் ஆப்சென்ட் என பதிவிடுவதாகவும் கூறப்படுகிறது. இதை கண்டித்தும், அனைத்துத் துறையிலும் பணியாளா்கள் முழுமையாக இல்லாததால், பணியாற்றக்கூடியவா்களுக்கு பணிச் சுமை ஏற்படுவதாகவும் கூறி புதன்கிழமை காலை செவிலியா்கள், பிற பணியாளா்கள் திடீரென பணியை புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால், புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவுக்கு வந்த மக்கள் பாதிக்கப்பட்டனா். பணியாளா்களின் செயல்பாட்டைக் கண்டித்து காமராஜா் சாலையில் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களுடன் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன் மற்றும் போலீஸாா் பேச்சு நடத்தியதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனா்.

மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் மருத்துவக் கண்காணிப்பாளா் கண்ணகி, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி பாா்த்திபன் விஜயன் ஆகியோா் பேச்சு நடத்தினா். இதன் பின்னா் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் பணிக்குத் திரும்பினா்.