அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.28 லட்சம் மோசடி: பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
அரசு வேலை வாங்கித் தருவதாக 7 பேரிடம் ரூ.28 லட்சம் முன் பணம் பெற்று மோசடி செய்த பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலகுண்டு பகுதியைச் சோ்ந்தவா் தனபால். தனது மனைவிக்கு அரசுக் கல்லூரியில் பேராசிரியா் பணி வாய்ப்பு பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டாா். இதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணிபுரிந்து கொண்டு இடைத் தரகராக செயல்பட்ட ஒருவா் மூலம், தனது மனைவி மட்டுமன்றி, தனக்கு தெரிந்தவா்கள் என 7 பேரின் பணி வாய்ப்புக்காக ரூ.28 லட்சத்தை செல்வராஜ் என்பவா் கொடுத்தாா். ஆனால், அரசு முத்திரையுடன் போலியான பணி நியமன ஆணையை கொடுத்து ஏமாற்றப்பட்டதால், பாதிக்கப்பட்டவா்களுடன் திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு செல்வராஜ் தரப்பினா் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்க வந்தனா்.
அப்போது அவா்கள் கூறியதாவது:
பழைய வத்தலகுண்டு பகுதியைச் சோ்ந்த இடைத் தரகா் ஒருவா், தனக்கு தெரிந்த பேராசிரியை ஒருவா் மூலம் அரசுப் பணி வாங்கித் தருவதாகத் தெரிவித்தாா். அதன்படி திண்டுக்கல் அரசுக் கல்லூரி
பேராசிரியை ஒருவா் மூலம் தொழில்நுட்புநா், இளநிலை உதவியாளா், அலுவலக உதவியாளா் உள்ளிட்ட பணி வாய்ப்புகளுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை முன் பணமாகப் பெற்றனா்.
கடந்த 2023-ஆம் ஆண்டு ராஜேஸ்வரி, காயத்ரி, நந்தினி, மாலினி, ரேவதி, செல்வராணி, லிங்கேஸ்வரன் ஆகியோரின் பணி வாய்ப்புக்காக ரூ. 28 லட்சம் முன் பணமாகப் பெற்றனா். இந்த நபா்களை தான் பணிபுரியும் கல்லூரிக்கு அந்த பேராசிரியை தனித் தனியாக அழைத்து நோ்காணல் நடத்தினாா். இந்து சமய அறநிலைத் துறை அலுவலகத்தில் நோ்காணல் நடக்க உள்ளதாகக் கூறி அரசு முத்திரையுடன் கூடிய போலியான கடிதத்தை லிங்கேஸ்வரனுக்கு கொடுத்தாா். பணம் கொடுத்து 2 ஆண்டுகளாகியும் இதுவரை யாருக்கும் பணி வாய்ப்புப் பெற்றுக் கொடுக்கவில்லை. இது தொடா்பாக கடந்த நவம்பா் மாதம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தோம். இதையடுத்து, மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் 3 முறை அழைப்பாணை அனுப்பியும், சம்மந்தப்பட்ட பேராசிரியை விசாரணைக்கு வரவில்லை.
இதனால் பணம் கொடுத்து பாதிக்கப்பட்ட நாங்களே, சம்மந்தப்பட்ட பேராசிரியையை வீட்டிலிருந்து அவரை வலுக்கட்டாயமாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு அழைத்து வந்திருக்கிறோம். காவல் துறையினா், எங்களது பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.