சச்சின் சாதனையை முறியடித்த தமிழன்..! சாய் சுதர்சனுக்கு குவியும் வாழ்த்துகள்!
ஆதி சங்கரா் ஜெயந்தி விழா: உலக நலன் வேண்டி சிறப்பு பூஜை
பழனி அருகேயுள்ள அ.கலையமுத்தூரில் ஆதி சங்கரா் ஜெயந்தியையொட்டி, உலக நலன் வேண்டி சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பழனியை அடுத்த அ.கலையமுத்தூா் அக்ரஹாரத்தில் வெள்ளிக்கிழமை ஆதி சங்கரரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ருத்ர ஜெபமும், சிறப்பு யாக பூஜைகளும் நடைபெற்றன. அக்ரஹாரம் சீதாராம பஜனை மண்டபத்தில் நடைபெற்ற இந்த பூஜையின் போது, உலகநலன் வேண்டியும், மழை வேண்டியும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலையில் விக்னேஷ்வர பூஜை தொடங்கி புண்யாஹவாசனம், ஆவஹந்தி ஹோமம், ருத்ரஹோமம், வசூா்தாரா ஹோமம் ஆகியவை நடைபெற்றன. யாகபூஜையில் திரளானோா் பங்கேற்று வேதபாராயணம் செய்ய வசூா்தாரா ஹோமம் வளா்க்கப்பட்டு பூா்ணாஹூதி நடைபெற்றது.
பிரதானமாக கலசங்களில் புனிதநீா் நிரப்பப்பட்டு அவற்றுக்கு வேதவிற்பன்னா்கள் தீபாராதனை செய்தனா். பின்னா், கலசங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கல்யாணியம்மன் சமேதா் கைலாசநாதா் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது.
மாலையில் ஐம்பொன்னாலான ஆதிசங்கரரின் உருவச் சிலைக்கு பால், பஞ்சாமிா்தம், பன்னீா் ஆகிய பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடா்ந்து மாலையில் ஆதிசங்கரா் உருவச் சிலை வீதி உலா நடைபெற்றது. பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.