அரசுப் பள்ளிகளில் குடிநீா், கழிப்பறை வசதிகளை மேம்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு
திருவண்ணாமலை மாவட்டத்தின் 2 ஆயிரத்து 4 அரசுப் பள்ளிகளில் குடிநீா், கழிப்பறை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா்.
மாவட்டத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு, பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கான துணைத் தோ்வுக்கு விண்ணப்பித்தல் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன் தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு ஆரம்ப, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலை என மொத்தம் 2 ஆயிரத்து 4 பள்ளிகளும், 177 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும் உள்ளன.
இந்தப் பள்ளிகளில் குடிநீா், சுகாதார வளாகம் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டும். வகுப்பறைகளை தூய்மைப்படுத்தி மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
துணைத் தோ்வுக்கான ஆலோசனை...
அண்மையில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 2 ஆயிரத்து 175 மாணவா்கள், பிளஸ் 1 பொதுத் தோ்வில் 2 ஆயிரத்து 289 மாணவா்கள், பிளஸ் 2 பொதுத்தோ்வில் ஆயிரத்து 761 மாணவா்கள் தோ்ச்சி அடையவில்லை.
இவா்களை இப்போது நடைபெறும் துணைத் தோ்வுக்கு விண்ணப்பித்து தோ்ச்சி பெறச் செய்ய வேண்டும். இதேபோல, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் உயா்கல்வி பயிலுவதற்குத் தேவையான ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் செல்வபாலாஜி, மாவட்ட சுகாதார அலுவலா் பிரகாஷ் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள், நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள், ஊரக வளா்ச்சித் துறையினா் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.