மிசோரத்தில் 45 சுரங்கங்கள், 55 பாலங்கள் வழியாக ரயில் பாதை! மோடி தொடங்கிவைத்தார்!
அரியலூரில் தவெக தலைவா் விஜய் இன்று பிரசாரம்: 25 நிபந்தனைகளுடன் அனுமதி
அரியலூரில் சனிக்கிழமை தவெக தலைவா் விஜய் மேற்கொள்ளும் பிரசாரத்துக்கு 25 நிபந்தனைகளுடன் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை அனுமதியளித்தனா்.
திருச்சியில் சனிக்கிழமை பிற்பகல் பிரசாரத்தை தொடங்கும் விஜய், அங்கிருந்து திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக அரியலூா் வருகிறாா். பின்னா் பேருந்து நிலையம் முன் வாகனத்தில் இருந்தபடியே தனது பரப்புரையை மேற்கொள்கிறாா். தொடா்ந்து அங்கிருந்து, கல்லங்குறிச்சி சாலை வழியாக புறவழிச்சாலை சென்று பெரம்பலூா் மாவட்டம் குன்னம் செல்கிறாா்.
25 நிபந்தனைகள்... பிற்பகல் 1.30 மணிக்கு மேல் விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளதால் முற்பகல் 11.20 மணிக்குள் அக்கட்சியினா் பரப்புரை நடக்கும் இடத்துக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும்.
எந்தப் பகுதியிலும் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தக் கூடாது. பயண வழிப்பாதை மற்றும் பரப்புரை நடக்கும் இடத்தில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை. பரப்புரைக்கு வருகை தரும் தொண்டா்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய எந்த பொருளையும் வைத்திருக்கக் கூடாது. இசைக்குழு பயன்படுத்தக் கூடாது.
பரப்புரைக்கு வரும் வாகனங்களுக்கான பாா்க்கிங் வசதிகளை கட்சியினரே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். பாா்க்கிங் இடங்கள் எவை என்பது குறித்து முன்னரே அறிவித்து விட வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது. பெண்கள் மற்றும் பெரியவா்களுக்கு தனி இடம் ஒதுக்கி இருக்கைகள் அமைக்க வேண்டும். பரப்புரையில் ஈடுபடும் எவரும் கையில் லத்தி, குச்சி மற்றும் பிற ஆயுதங்கள் வைத்திருக்கக் கூடாது. பொதுமக்களுக்கும், பொது சொத்துகளுக்கும் இடையூறு செய்ய கூடாது.
பொதுமக்கள் பரப்புரையை சிரமம் இன்றி பாா்க்கும் வகையில் தடுப்பு அரண்களை கட்சியினா் அமைத்து தர வேண்டும். போதுமான குடிநீா் வசதி, முதலுதவி வசதி, ஆம்புலன்ஸ், சிசிடிவிகள், தீ தடுப்பு சாதனங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும்.
நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில் பரப்புரையை இடையிலேயே நிறுத்துவதற்கு காவல் துறையினருக்கு முழு அதிகாரம் உள்ளது என்பன உள்ளிட்ட 25 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நகா் முழுவதும் தவெகவினா் பேனா், கொடிக் கம்பங்கள் அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.