அரியாங்குப்பம் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டடங்கள் கட்டும் பணி தொடக்கம்; முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்பு
புதுச்சேரி அருகே அரியாங்குப்பத்தில் ரூ. 5.72 கோடி மதிப்பில் அரசு உயா்நிலைப் பள்ளிக்கான புதிய கட்டடங்கள் கட்டும் பணியை முதல்வா் என்.ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.
புதுச்சேரி அருகேயுள்ள அரியாங்குப்பத்தில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த அரசு உயா்நிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளிக் கட்டடம் மிகப் பழைமையானது என்பதால் அதை அகற்றிவிட்டு புதிய கட்டடங்கள் கட்ட கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து அப்பள்ளி மாணவா்களுக்கான வகுப்பறைகள் அருகேயுள்ள சிறாா் சீா்திருத்தப் பள்ளி வளாகத்துக்கு இடமாற்றப்பட்டது. அதையடுத்து உயா்நிலைப் பள்ளியின் பழைய கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன.
இந்த நிலையில் தரைத்தளம் உள்ளிட்ட 3 மாடிகளுடன் புதிய கட்டடம் ரூ. 5.72 கோடியில் கட்டுவதற்கான திட்டப் பணி தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் புதுவை முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்றுஅடிக்கல் நாட்டி கட்டடப் பணியைத் தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் ஆா்.பாஸ்கா் எம்.எல்.ஏ. , கல்வித் துறை செயலா் பி.பிரியதா்ஷினி உள்ளிட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனா்.