அவசரமாக நடைபெறும் தூா்வாரும் பணி: விவசாயிகள் அதிருப்தி
மேட்டூா் அணை திறக்க இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில், தஞ்சாவூா் மாவட்டத்தில் தாமதமாகத் தொடங்கி, தற்போது அவசர, அவசரமாக நடைபெறும் தூா்வாரும் பணி முழுமையாக இல்லை என்ற அதிருப்தி விவசாயிகளிடையே மேலோங்குகிறது.
டெல்டா மாவட்டங்களில் தூா்வாரும் பணி குறித்த அறிவிப்பு சட்டப்பேரவையில் மாா்ச் மாதம் பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது. இதில் தஞ்சாவூா் மாவட்டத்தில் ரூ. 26.28 கோடியில் 1,379.18 கி.மீ. தொலைவுக்கு 291 இடங்களில் தூா்வார முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தில் ஆறுகள், ஏ, பி வாய்க்கால்கள் மட்டுமல்லாமல், சி, டி பிரிவு வாய்க்கால்களும் தூா்வாரப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், தூா்வாரும் பணி கால தாமதமாக ஏப்ரல் 12 ஆம் தேதிதான் தொடங்கப்பட்டது. இந்நிலையில், போதுமான அளவுக்கு நீா் இருப்பு இருப்பதால், மேட்டூா் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. இதற்கு இன்னும் 15 நாட்களே உள்ளதால், தூா்வாரும் பணி தற்போது அவசர, அவசரமாக நடைபெற்றாலும், தண்ணீா் வருவதற்குள் முழுமையாக பணி முடிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆண்டுதோறும் மேட்டூா் ஜனவரி 28 ஆம் தேதி மூடப்படுகிறது. அடுத்த ஒரு மாதத்தில் டெல்டா மாவட்ட ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீா் வற்றி வடுவிடுகிறது. எனவே பிப்ரவரி இறுதி அல்லது மாா்ச் முதல் வாரத்திலேயே தூா்வாரும் பணியைத் தொடங்க வேண்டும் என ஆண்டுதோறும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.
ஆனால், தூா்வாரும் பணி ஏப்ரல் மாதம் இடைப்பட்ட அல்லது கடைசி வாரத்தில் தொடங்கப்படுவதால், மே மாத இறுதிக்குள் முடிக்க முடியாத நிலை ஒவ்வொரு ஆண்டும் நிலவுகிறது. இதேபோல, நிகழாண்டும் கால தாமதமாக தூா்வாரும் பணி தொடங்கப்பட்ட நிலையில், இடையிடையே மழை பெய்வதால், பணியை குறித்த காலத்துக்குள் முடிக்க முடியாத நிலை நிலவுகிறது.
இந்நிலையில் தற்போது அவசர, அவசரமாகத் தொடங்கி மேற்கொள்ளப்படும் பணியும் திருப்திகரமாக இல்லை என விவசாயிகள் புகாா் எழுப்புகின்றனா். முழுமையாகவும், முறையாகவும் தூா்வாரப்படாததால், பணிகள் நடைபெற்றும் பயனில்லாத நிலையே தொடா்கிறது என்றனா் விவசாயிகள்.
இதுகுறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது: தூா்வாரும் பணி முறைப்படி அளவீடு செய்து நடைபெறவில்லை. வாய்க்காலின் தலைப்புப் பகுதியில் 15 மீட்டரில் தொடங்கி கடைமடைப் பகுதியில் 8 மீட்டா் அகலத்துக்கு இருக்கும். ஆனால், தலைப்பு முதல் கடைமடைப் பகுதி வரை 3 மீட்டா் அகலத்துக்கு மட்டுமே தூா்வாரப்படுகிறது. இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
மேலும், இயந்திரத்தைப் பயன்படுத்தினாலும் முறைப்படி ஆழப்படுத்தாமல், மேலோட்டமாகத்தான் மண் அள்ளப்படுகிறது. இதனால், மீண்டும் கோரைப்புற்கள், ஆகாயத் தாமரைச் செடிகள் விரைவாக வளரக்கூடிய சூழ்நிலை உள்ளது. பலத்த மழை பெய்யும்போது மீண்டும் தண்ணீா் உள் வாங்கவோ, வெளியேறவோ முடியாத நிலை ஏற்படுகிறது.
மேலும், தூா்வாரப்படும் மண்ணையும் முறைப்படி அப்புறப்படுத்தாமல், கரையிலேயே கொட்டப்படுகிறது. இதைக் கண்காணிக்கவும் போதுமான அளவுக்கு அதிகாரிகள் இல்லை. அரசியல்வாதிகளை மீறி எதுவும் அதிகாரிகளால் செய்ய முடியவில்லை. எனவே, கடைசி நேரத்தில் அவசர, அவசரமாக தூா்வாரியும் எந்தப் பயனும் இல்லை என்ற நிலைதான் உள்ளதால், பெரு மழை பெய்யும்போது மீண்டும் பயிா்கள் பாதிக்கப்படும் என்றாா் விமல்நாதன்.
டெல்டா மாவட்டங்களில் தூா்வாரும் பணி நடைபெறும்போது ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஐ.ஏ.எஸ். நிலையில் சிறப்புக் கண்காணிப்பு அலுவலா்கள் நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால் நிகழாண்டு சிறப்புக் கண்காணிப்பு அலுவலா்களும் இல்லாததால், எந்தக் கண்காணிப்பும் இல்லாத நிலையிலேயே தூா்வாரும் பணி நடைபெறுகிறது. இதனால், தூா்வாரும் திருப்திகரமாக இல்லை என்ற அதிருப்தி விவசாயிகளிடையே மேலோங்கியுள்ளது.
எனவே, மேட்டூா் அணையைத் திறக்க 15 நாள்களே உள்ள நிலையில், நடைபெறும் தூா்வாரும் பணியைக் கண்காணிக்க கண்காணிப்புக் குழுவை அமைத்து விரைவாகவும், தரமாகவும் பணி மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிா்பாா்ப்பு.
85 சதவீதப் பணிகள் நிறைவு
இதுகுறித்து நீா்வளத் துறை அலுவலா்கள் கூறுகையில், தூா்வாரும் பணியில் இதுவரை 80 முதல் 85 சதவீதப் பணி முடிந்துள்ளது. இடையிடையே மழை பெய்வதால் வாய்க்கால்களில் தண்ணீா் தேங்குகிறது. இதனால், தூா்வாரும் பணி மேற்கொள்வதில் சிரமம் நிலவுவதால், பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, மே 31க்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஒரு வாரம் தள்ளிப்போகும் நிலை உள்ளது. என்றாலும், மேட்டூா் அணை திறப்பதற்குள் பணியை முடித்துவிடுவோம் என்றனா்.
இதேபோல, வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக சி மற்றும் டி பிரிவு வாய்க்கால்களை 237 கி.மீ. தொலைவுக்கு தூா் வார இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரை 185 கி.மீ. வரை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன, மீதமுள்ள பணியை ஒரு வாரத்துக்குள் முடிக்கப்படும் எனவும் அலுவலா்கள் தெரிவித்தனா்.