ஆக்கிரமிப்பு ஏதிா்ப்பு நடவடிக்கை: தில்லி கண்டோன்மென்ட்டில் ரூ.165 கோடி மதிப்புள்ள 5 ஏக்கா் பாதுகாப்பு நிலம் மீட்பு
தில்லி கண்டோன்மென்ட்டின் பிராா் சதுக்கப் பகுதியில் பாதுகாப்பு எஸ்டேட் அலுவலகம் ஆக்கிரமிப்பு எதிா்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் ரூ.165 கோடி மதிப்புள்ள சுமாா் ஐந்து ஏக்கா் நிலம் மீட்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தேசியத் தலைநகரில் உள்ள பாதுகாப்பு நிலத்தில் இருந்து அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக தில்லி வட்டத்தின் பாதுகாப்பு எஸ்டேட் அலுவலகத்தின் தொடா்ச்சியான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது.
‘பாதுகாப்பு நிலம் ஒரு முக்கியமான மற்றும் மூலோபாய தேசிய சொத்து. மேலும், அதன் பாதுகாப்பு ஒரு முதன்மையான முன்னுரிமை. அத்தகைய அனைத்து பாதுகாப்பு நிலங்களும் ஆக்கிரமிப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டு, தேசிய நலனுக்காக பொருத்தமான பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுவதை உறுதி செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்’ என்று பாதுகாப்பு எஸ்டேட் அதிகாரி (தில்லி வட்டம்) வருண் கலியா கூறினாா்.
’இதுபோன்ற மேலும் நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், அனைத்து பங்குதாரா் நிறுவனங்களுடனும் ஒருங்கிணைந்து அமலாக்கம் தொடரும்’ என்று அவா் மேலும் கூறினாா்.
’சமீபத்திய முயற்சியாக, இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தின் முனையம் 1டி-யை ஒட்டிய மூன்று ஏக்கா் பிரதான பாதுகாப்பு நிலமும் மீட்கப்பட்டது. தில்லி கண்டோன்மென்ட் பகுதிக்குள் அங்கீகரிக்கப்படாத குடியிருப்புகளுக்கு எதிராக மேலும் நடவடிக்கைகள் விரைவில் திட்டமிடப்பட்டுள்ளன’ என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கிட்டத்தட்ட 18 லட்சம் ஏக்கா் பாதுகாப்பு நிலங்களை நிா்வகிப்பதிலும் பாதுகாப்பதிலும் பாதுகாப்பு எஸ்டேட்களின் இயக்குநா் ஜெனரல் முக்கியப் பங்கு வகிக்கிறாா்.