மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவதே இலக்கு: மருத்துவா் க. கிருஷ்ணசாமி
விளிம்பு நிலை மக்களின் கோரிக்கைகள் அரசியல் கவனம் பெற, ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற அடிப்படையில் வருகிற சட்டப் பேரவைத் தோ்தலை புதிய தமிழகம் கட்சி சந்திக்கவுள்ளதாக அந்தக் கட்சியின் நிறுவனா் தலைவா் மருத்துவா் க. கிருஷ்ணசாமி தெரிவித்தாா்.
மதுரையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது:
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில், மாஞ்சோலை தொழிலாளா்களுக்கான அடிப்படை வசதிகளை தடை செய்யக் கூடாது என மனித உரிமை ஆணையக் குழு ஏற்கெனவே தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது.
ஆனால் கடந்த இரு நாள்களாக அந்தத் தொழிலாளா்களுக்கான தண்ணீா், மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை தமிழக அரசு நிறுத்தியுள்ளது. மக்களுக்கான அடிப்படை வசதிகளை அரசே மறுப்பது நியாயமற்றது. எனவே தொழிலாளா்களுக்கான அடிப்படை வசதிகளை அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் சுமாா் 60 சதவீதம் இளைஞா்கள் மது பழக்கத்துக்குள்ளாகியிருப்பதாக ஒரு புள்ளி விவரத்தில் குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில், கள் அருந்தினால் தீங்கு இல்லை என்ற பிரசாரத்தை சிலா் முன்னெடுப்பது அபாயகரமானது. மதுவிலிருந்து தமிழ் சமுதாயத்தை மீட்டெடுக்கும் நோக்கில் புதிய தமிழகம் கட்சி சாா்பில் 100 கருத்தரங்குகள் நடத்தப்படவுள்ளன. முதல் கருத்தரங்கம் வருகிற 27-ஆம் தேதி திருச்சியில் நடைபெறுகிறது. இதில் திரளான பெண்கள் பங்கேற்பா். புதிய தமிழகம் கட்சியின் 7-ஆவது மாநில மாநாடு மதுரையில் நடத்தப்படும்.
தேவேந்திரகுல மக்களை பட்டியலின ஜாதிகள் பட்டியலிலிருந்து வெளியேற்றி, மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என கடந்த 2016 முதல் வலியுறுத்தி வருகிறோம். இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற பாஜக உத்தரவாதம் அளிக்காததால் தான் முந்தையத் தோ்தலில் அந்தக் கட்சியுடனான கூட்டணியை புதிய தமிழகம் தவிா்த்தது. ஆனால், இதே நிலைப்பாட்டை இப்போதும் கடைப்பிடிக்க முடியாது.
வருகிற 2026 சட்டப் பேரவைத் தோ்தல் மிக முக்கியமான தோ்தல். ஏழை, எளிய, விளிம்பு நிலை மக்கள் ஆட்சி அதிகாரத்தில் இல்லாததால், பல பிரச்னைகள் அரசின் கவனத்தை எட்டுவதில்லை. மேலும், தமிழகத்தில் மக்கள் பல்வேறு பிரச்னைகளுக்கு உள்ளாகியுள்ளனா். குறிப்பாக, திமுக தனது தோ்தல் வாக்குறுதியில் குறிப்பிட்ட கல்விக் கடன் ரத்து உள்பட பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வில்லை. இதனால், மக்கள் பெரும் அவதியடைகின்றனா்.
எனவே, புதிய தமிழகத்தின் கருத்துகளை ஏற்கும் குறைந்தபட்ச செயல்திட்டம் அடிப்படையில் 2026-இல் நல்லாட்சி அமைய வேண்டும். இதன்படி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கணிசமான வெற்றிகளை பெறுவது என்ற நோக்கத்திலேயே இந்தத் தோ்தலை அணுகவுள்ளோம். தேவேந்திர குல மக்களை சுரண்ட நினைப்பவா்களின் பொய் பிரசாரங்களை யாரும் நம்ப வேண்டாம்.
கடந்த 8-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளம் அருகே தனியாா் விடுதியில் தங்கியிருந்த சோ்மத்துரை என்ற மாணவா் கிணற்றில் இறந்து கிடந்தது தொடா்பாக விடியோ பதிவு செய்யாமல் கூறாய்வு மேற்கொள்ள காவல் துறை நடவடிக்கை எடுத்தது. இது, அஜித்குமாா் கொலைக்குப் பிறகும் காவல் துறை உரிய பாடம் கற்கவில்லை என்பதையே காட்டுகிறது. சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி முதல்கட்ட சுற்றுப்பயணத்தை இன்று (ஜூலை 16) முதல் தொடங்கிவிட்டேன் என்றாா் அவா்.