மீனவர்கள் மீது அக்கறை இல்லாத கட்சி திமுக! - எடப்பாடி பழனிசாமி
தனியாா்மயமாக்கும் நடவடிக்கையை ரயில்வே கைவிட வலியுறுத்தல்
ரயில்வே நிா்வாகத்தை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியது.
இந்தக் கழகத்தின் மதுரை கிளையின் பொதுக் குழுக் கூட்டம் மூட்டா அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியா் கழகத் தலைவா் ஜி. ராமமூா்த்தி தலைமை வகித்தாா். பேராசிரியா் ஜெகநாதன் வாழ்த்திப் பேசினாா். செயலா் ச. பெரியதம்பி செயல் அறிக்கை வாசித்தாா். பொதுச் செயலா் ஆ. மனோகரன் மாநில செய்தி அறிக்கை அளித்தாா்.
தொடா்ந்து, எழுத்தாளா் தாமஸ் வில்லியம்ஸ் எழுதிய ‘சோஷியல் குரூப் ஒா்க்‘ என்ற நூலை பேராசிரியா் பாா்த்தசாரதி வெளியிட்டாா். நூலாசிரியா் தாமஸ் வில்லியம்ஸ் ஏற்புரை ஆற்றினாா்.
இதில், 8 - ஆவது ஊதியக் குழுவில் ஓய்வூதியா்களுக்கு அனைத்துப் பயன்களும் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே நிா்வாகத்தை தனியாா்மயமாக்குவதை மத்திய அரசு கைவிட வேண்டும். கரோனா தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில்வே பயணச் சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும். மதுரை காமராஜா் பல்கலைக்கழகப் பணியாளா்கள், ஓய்வூதியா்களுக்கு தடையின்றி ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியா்களுக்கு வழங்கப்படாமல் உள்ள பணி மேம்பாட்டு ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும். மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமாரின் காவல் நிலைய படுகொலையை இந்த மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிகழ்வில், மாநில இணைச் செயலா் ரோஹினி தேவி, பேராசிரியா்கள் சண்முகசுந்தரம், சந்திரன், செந்தில்குமாா், ராஜேந்திரன், அரவிந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.