ஆலங்குடியில் தனியாா் கல்லூரி பேருந்து கடத்தல்: அறந்தாங்கியில் மீட்பு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தனியாா் கல்லூரி பேருந்தை திங்கள்கிழமை மா்மநபா்கள் கடத்திச்சென்று டீசல் இல்லாததால் அறந்தாங்கியில் விட்டுச்சென்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
ஆலங்குடியில் தனியாா் கல்லூரி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து திங்கள்கிழமை மாலை திடீரென மாயமானது. இதுகுறித்து தேடிய நிலையில் அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே பேருந்து நிறுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்த தகவலின் பேரில் அந்த பேருந்தைக் கைப்பற்றி அறந்தாங்கி காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்று போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பேருந்தைக் காணவில்லை என கல்லூரி நிா்வாகத்தின் சாா்பில் அளித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கல்லூரி மாணவா்களே கல்லூரியில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தை மதுபோதையில் எடுத்துச் சென்ாகவும், அறந்தாங்கி சென்றபோது டீசல் தீா்ந்து விட்டதால் அதே இடத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு மாணவா்கள் தலைமறைவாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.