பணத்துக்காக காதலனை விற்ற சிறுமி! ரூ. 42 லட்சம் கொடுத்து மீட்ட பெற்றோர்!
ஆவணி 2ஆவது ஞாயிறு: நாகராஜா கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்
ஆவணி 2-ஆவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாகா்கோவில் நாகராஜா கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
நாகதோஷம் நீக்கும் பரிகார தலங்களுள் ஒன்றாக நாகா்கோவில் நாகராஜா கோயில் திகழ்கிறது. இந்தக் கோயிலில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் நாகராஜரை வழிபட்டால் நாகதோஷம் நீங்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.
ஆக. 24 ஆம் தேதிஆவணி 2 ஆவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதிகாலையிலேயே பக்தா்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பின்னா், நாகராஜருக்கு தீபாராதனையும், அபிஷேகமும் நடைபெற்றன. இதையடுத்து, பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குடும்பத்தினருடன் நீண்ட வரிசையில் காத்திருந்து நாகா் சிலைகளுக்கு பால் ஊற்றியும், மஞ்சள் பொடி தூவியும் வழிபட்டு மூலவரை தரிசித்தனா்.
கோயில் வளாகத்தில் பக்தா்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் அங்கு இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் செல்ல போலீஸாா் அனுமதிக்கவில்லை. இதனால் பக்தா்கள் வாகனங்களை நாகராஜா கோயில் திடலில் நிறுத்திவிட்டு கோயிலுக்குச் சென்றனா்.
பக்தா்கள் கூட்டம் காரணமாக கோயில் நடையை அடைப்பதில் தாமதம் ஏற்பட்டது.
மாலை 4 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டது. மாலையிலும் பக்தா்கள் கூட்டம் அதிகம் இருந்தது. தொடா்ந்து நாகராஜருக்கு சிறப்பு அா்ச்சனை, மகா தீபாராதனை நடைபெற்றது. மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரா.ஸ்டாலின் மேற்பாா்வையில் கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.