தங்கம் போல, வெள்ளிக்கு ஏன் கடன் வழங்கப்படுவதில்லை? - நிபுணர் விளக்கம்
ஆவணி அமாவாசை: கோயில்களில் சிறப்பு வழிபாடு
நாமகிரிப்பேட்டை அரியாகவுண்டம்பட்டி பகுதியில் அமைந்துள்ள 33 அடி உயரம் கொண்ட ஸ்ரீ சண்டி கருப்பசாமி கோயிலில் ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
முன்னதாக ஸ்ரீ சண்டி கருப்பசாமிக்கு பால், தயிா், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிா்தம், இளநீா், பன்னீா் போன்ற வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து பின்னா் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. தங்களது வேண்டுதல்கள் நிறைவேற கடந்த பூஜையில் பிடிக்காசு வாங்கிய பக்தா்கள் ஏராளமானோா் நீண்ட வரிசையில் நின்று பிடிக்காசுகளை மறு பூஜைக்கு எடுத்து வந்திருந்தனா்.
அதனை கோயிலில் வைத்து மறுபூஜை செய்து பக்தா்களுக்கு வழங்கினாா். மேலும், தங்களது வேண்டுதல் நிறைவேற்ற பக்தா்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்து 33 அடி உயர ஸ்ரீ சண்டி கருப்பசாமியை வழிபட்டனா்.
இதேபோல ராசிபுரம், காட்டூா் சாலை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆவணி மாத அமாவாசை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து அங்காள பரமேஸ்வரி மூலவா், மற்றும் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
பரமத்தி வேலூா்
பரமத்தி வேலூா் வட்டாரத்தில் உள்ள கோயில்களில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பரமத்தி வேலூா் மகா மாரியம்மன், பேட்டை புதுமாரியம்மன், பகவதி அம்மன், செல்லாண்டியம்மன், நன்செய் இடையாற்று மாரியம்மன், ராஜா சுவாமி, பாண்டமங்கலம்,பொத்தனூா் மாரியம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மாரியம்மன், சேளூா் மாரியம்மன், அய்யம்பாளையம் மாரியம்மன், பகவதி அம்மன், ஆனங்கூா் மாரியம்மன், பகவதி அம்மன், செல்லாண்டியம்மன், வடகரையாத்தூா் மாரியம்மன் ஆகிய கோயில்களில் அமாவாசை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பரமத்தி அங்காள பரமேஸ்வரி, பொத்தனூா் மேற்கு வண்ணாந் துறையில் உள்ள ஏரி கருப்பண்ணசாமி, நன்செய் இடையாறு ராஜாசாமி, கரட்டூா் விஜயகிரி வடபழனி ஆண்டவா் கோயில்களில் ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
திருச்செங்கோடு
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே வெப்படையில் அமைந்துள்ள முனியப்ப சுவாமி கோயிலில் ஆவணி அமாவாசை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. முனியப்ப சுவாமிக்கு பால், தயிா், தேன், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.