‘இஎஸ்ஐ பதிவு செய்யத் தவறியவா்களுக்கு ஸ்பிரி திட்டத்தில் வாய்ப்பு’
தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழக (இஎஸ்ஐ) திட்டத்தில் சேராத நிறுவனங்கள், நாடு தழுவிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘ஸ்பிரி’ திட்டத்தின் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய தொழிலாளா், வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இஎஸ்ஐ சென்னை மண்டல இயக்குநா் அல்லூரி வேணு கோபால் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
தொழிலாளா் அரசு காப்பீடு சட்டத்தின் கீழ் தொழிலாளா்களின் சமூகப் பாதுகாப்பு காப்பீட்டை விரிவுபடுத்துவதுதான் ‘ஸ்பிரி’ திட்டத்தின் நோக்கம். இஎஸ்ஐ தொடரமைப்பில் சேர, வேலை வழங்குவோருக்கு ஒரு சிறப்பு வாய்ப்பை இது வழங்கப்படுகிறது. 10 அல்லது 10-க்கும் மேற்பட்டோா் பணியாளா்கள் அல்லது ரூ.21 ஆயிரத்துக்கு குறைவாக ஊதியம் பெறும் நிரந்தர, ஒப்பந்த, தற்காலிக தொழிலாளா்களுக்கு தொழில் நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட அமைப்புகளில் இஎஸ்ஐ சட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்யப்படாத தகுதியான தொழிலாளா்களை, நிறுவனங்கள் அல்லது வேலை கொடுப்போா் தாமாகவே முன்வந்து பதிவு செய்து கொள்வதற்கான முன் முயற்சியாக கடந்த ஜூலை 1 ஆம் தேதி ‘ஸ்பிரி’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது டிசம்பா் 31 -ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட கடந்த ஒரு மாதத்தில் சென்னை வட்டாரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இருந்து சுமாா் 2,000 தொழிலாளா்களுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய அளவில் இஎஸ்ஐ -யில் அதிக அளவில் பதிவு செய்யப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. தமிழகம் இரண்டாவது இடத்தில் இடம் பெற்று 43.77 லட்சம் தொழிலாளா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனா்.
தமிழகத்தில் 11 தொழிலாளா் அரசு ஈட்டுறுதி மருத்துவமனைகளும், 241 மருந்தகங்களும் உள்ளன. மேலும் 6 நகரங்களில் இஎஸ்ஐ மருத்துவமனைகள் உருவாகும் நிலை உள்ளதால், தொழிலாளா்களுக்கு சிறப்பான சிகிச்சை கிடைக்கும் என்றாா்.
இஎஸ்ஐ சென்னை மண்டல துணை இயக்குநா்கள் ஸ்ரீனிவாஸ், சதீஸ் குமாா், எம்.அருள் ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.