இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவாரா?
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா தொடர்வார் எனக் கூறப்படுகிறது.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
டெஸ்ட் போட்டிகளில் அண்மைக் காலமாக மிகவும் மோசமான ஃபார்மில் இருக்கும் கேப்டன் ரோஹித் சர்மா, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியை வழிநடத்துவாரா அல்லது புதிய கேப்டன் நியமிக்கப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. இருப்பினும், அண்மையில் நிறைவடைந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இதையும் படிக்க:“பதற்றமாக இருந்தேன்...” ஐபிஎல் மெகா ஏலம் குறித்து மனம் திறந்த கே.எல்.ராகுல்!
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ரோஹித் சர்மா, அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். சாம்பியன் பட்டம் வென்ற பிறகு பேசிய ரோஹித் சர்மா, தற்போது ஓய்வு பெறும் எண்ணமில்லை எனவும் தெரிவித்தார்.
கேப்டனாக தொடர்வாரா ரோஹித் சர்மா?
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் தோல்வி என ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டு டெஸ்ட் தொடர்களில் தோல்வியடைந்தது. இதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பினையும் இழந்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற தவறிய இந்திய அணி, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்று அசத்தியது. இந்த மாதம் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ளது. அதன் பின், இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடரிலிருந்து அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி தொடங்குகிறது.
இதையும் படிக்க: நியூசி.க்கு எதிரான தொடரில் சிறந்த முடிவுகளை பெறுவோம்: பாக். கேப்டன்
இதுவரையில் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்புக்கு புதிதாக கேப்டனை நியமிப்பது குறித்து எந்த ஒரு ஆலோசனையும் நடைபெறவில்லை. அதனால், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மாவே கேப்டனாக தொடர்வார் எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவித்துள்ளதாவது: டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவே தொடர்வார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடருக்குப் பிறகு இந்திய அணி எந்தவொரு டெஸ்ட் தொடரிலும் விளையாடவில்லை. அதனால், கேப்டன் பொறுப்பில் எந்தவொரு மாற்றமும் இருக்காது. அதேபோல, டெஸ்ட் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என ரோஹித் சர்மா எதுவும் தெரிவிக்கவும் இல்லை. ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளதால், இந்திய அணித் தேர்வுக்குழு டெஸ்ட் போட்டி குறித்து தற்போது எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.