நான் எதுவும் அறிவிக்கவில்லை; ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் நான் வெளியிடப்போவதில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி, இந்திய அணிக்காக பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். அண்மையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டார்.
இதையும் படிக்க: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவாரா?
பதற்றம் வேண்டாம்
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்குப் பிறகு, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவார்கள் என்ற செய்தி பரவியது. சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகு, நான் தற்போது ஓய்வை அறிவிக்கப் போவதில்லை என ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ரோஹித் சர்மா.
இந்த நிலையில், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதில்லை எனக் கூறி ஓய்வு குறித்த வதந்திகளுக்கு விராட் கோலியும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க:“பதற்றமாக இருந்தேன்...” ஐபிஎல் மெகா ஏலம் குறித்து மனம் திறந்த கே.எல்.ராகுல்!
இது தொடர்பாக ஆர்சிபி தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: யாரும் பதற்றமடைய வேண்டாம். நான் எதுவும் அறிவிக்கப் போவதில்லை. தற்போது எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. கிரிக்கெட் விளையாடுவதை நான் இன்னும் நேசிக்கிறேன். கிரிக்கெட் விளையாடுவதை மிகவும் அனுபவித்து மகிழ்ச்சியாக விளையாடுகிறேன். கிரிக்கெட் மீதான அதீத ஆர்வம் உள்ளவரையில் தொடர்ந்து விளையாடுவேன். நான் எந்த ஒரு சாதனைக்காகவும் விளையாடவில்லை என்றார்.