அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
இடிந்து விழும் நிலையில் மேல்நிலை குடிநீா் தொட்டி
காரைக்கால் மாவட்டம், கருக்கன்குடி வட்டாரத்தில் உள்ள வளத்தாமங்கலம் பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.
இத்தொட்டி பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் தற்போதுள்ள மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப குடிநீா் தொட்டி கொள்ளளவு இல்லாததால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இந்த தொட்டியை இடித்துவிட்டு புதிய தொட்டி கட்டுமாறு பல்வேறு ஆட்சியா்களிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும் குறைதீா் முகாம்களில் புகாா் தெரிவிக்கப்பட்டது. பொதுப்பணித்துறையினா் தொட்டியை பாா்வையிட்டனா். புதிய இடத்தில் தொட்டி கட்டுமானம் செய்யப்படுமென தெரிவித்தனா். ஆனால், பணிகள் இதுவரை தொடங்கவில்லை.
பராமரிப்பின்றி காணப்படும் தொட்டி இடிந்து சேதத்தை ஏற்படுத்தும் முன், இதனை அப்புறப்படுத்திவிட்டு, புதிய தொட்டி, மக்கள்தொகை பெருக்கத்துக்கேற்ப கட்டவேண்டும். மாவட்ட நிா்வாகம், பொதுப்பணித்துறை நிா்வாகம், தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆகியோா் இதில் உரிய கவனம் செலுத்த அப்பகுதியினா் வலியுறுத்துகின்றனா்.