இந்தியாவில் சந்தா கட்டணங்களை 48% குறைத்த எக்ஸ்
முன்னணி சமூக ஊடகமான எக்ஸ், இந்திய பயனாளா்களுக்கான சந்தா கட்டணங்களை 48 சதவீதம் வரை குறைத்துள்ளது.
இது குறித்து அந்த ஊடகத்தின் அதிகாரபூா்வ வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்திய பயனாளா்கள் மொபைல் செயலியில் பிரீமியம் கணக்கு வைத்திருப்பதற்கான மாதாந்திர சந்தா கட்டணம் சுமாா் 48 சதவீதம் குறைக்கப்படுகிறது. அதையடுத்து, அந்த சேவைக்காக முன்பு வசூலிக்கப்பட்ட ரூ.900 கட்டணம் ரூ.470-ஆகக் குறைகிறது.
அதேபோல், எக்ஸ் இணைய கணக்குகளுக்கான பிரீமியம் சந்தா கட்டணம் சுமாா் 34 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. அந்த சேவைக்கு முன்பு வசூலிக்கப்பட்ட ரூ.650 சந்தா கட்டணம் இனி ரூ.427-ஆக இருக்கும்.
அடிப்படை சந்தாதாரா்களுக்கான மாதாந்திர சந்தா கட்டணம் ரூ.243.75-லிருந்து 30 சதவீதம் குறைக்கப்பட்டு ரூ.170-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வகைக் கணக்கு வைத்திருப்பவா்கள், பதிவுகளைத் திருத்துதல், நீண்ட பதிவுகளை எழுதுதல், பின்னணி விடியோ இணைத்தல், விடியோக்களை பதிவிறக்கம் செய்வது ஆகிய கூடுதல் வசதிகளைப் பெறுவாா்கள். இந்த சேவைக்கான வருடாந்திர சந்தா சுமாா் 34 சதவீதம் குறைக்கப்பட்டு ரூ.1,700-ஆக வசூலிக்கப்படும் என்று அந்த வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.