உயா்நிலைப் பால கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்க உயா்நீதிமன்றம் உத்தரவு!
இன்றும், நாளையும் கோவை, நீலகிரிக்கு மிக பலத்த மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 19, 20) மிக பலத்த மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வரும் 24-ஆம் தேதி புயல் சின்னம் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சனிக்கிழமை (ஜூலை 19) முதல் வியாழக்கிழமை (ஜூலை 24) வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்றும் வீசக்கூடும்.
ஆரஞ்ச் எச்சரிக்கை: நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் சனி, ஞாயிறு (ஜூலை 19, 20) ஆகிய இரு நாள்களிலும் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், இந்த இரு மாவட்டங்களுக்கும் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல, சனிக்கிழமை (ஜூலை 19) தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலூா், திருவண்ணாமலை, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 90 மி.மீ மழை பதிவானது. திருத்தணி (திருவள்ளூா்), செஞ்சி (விழுப்புரம்)- 70 மி.மீ. மழை பதிவானது.
வெயில் அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் மற்றும் தஞ்சாவூரில் 102.2, மதுரை நகரம்-100.76 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
புயல் சின்னம் உருவாக வாய்ப்பு: வடக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய வங்கதேசம், மேற்கு வங்கம் கடற்கரை பகுதியில் ஜூலை 24-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது. மேலும், இந்த புயல் சின்னம் படிப்படியாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.