நாடாளுமன்ற குழுக்களின் பதவிக்காலத்தை 2 ஆண்டுகளாக நீட்டிக்கப் பரிசீலனை
இரட்டைக் கொலை வழக்கு: குற்றவாளியைக் கைது செய்யாததை கண்டித்து சாலை மறியல்!
கிருஷ்ணகிரி அருகே தாய் - மகள் இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளியைக் கைது செய்யாததைக் கண்டித்து, உறவினா்கள் சடலங்களுடன் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரியை அடுத்த பாஞ்சாலியூா், யாசிம் நகரைச் சோ்ந்த எல்லம்மாள் (50), அவரது மகள் சுசிதா (13) ஆகியோா் வீட்டில் இருந்தபோது வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டனா். கொலை நிகழ்ந்து 24 மணி நேரமாகியும் குற்றவாளியை போலீஸாா் கைது செய்யாததைக் கண்டித்து, கொலை செய்யப்பட்டவா்களின் உறவினா்கள் ஆா்.பூசாரிப்பட்டி, நான்கு சாலைகள் சந்திப்பு அருகே சடலங்களுடன் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
இப்பகுதியில் செயல்படும் அரசு மதுபானக் கடைகளால் சமூகவிரோத செயல்கள் அதிகரித்துள்ளன. இதுகுறித்து புகாா்கள் தெரிவித்தும் போலீஸாா் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனா். இந்நிலையில், தாய் - மகள் இருவரும் கொலை செய்யப்பட்ட நிலையில், போலீஸாா் இதுவரை குற்றவாளியைக் கைது செய்யவில்லை. குற்றங்கள் அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கா், துணைக் காவல் கண்காணிப்பாளா் முரளி மற்றும் காவல் ஆய்வாளா்கள் சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும், கொலை வழக்கில் தொடா்புடையவா்கள் விரைவில் கைது செய்யப்படுவா் என உறுதியளித்ததன் பேரில், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால், அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.