தேசிய அளவில் பதக்கம் வென்ற தமிழக குத்துச்சண்டை வீரா்களுக்கு பாராட்டு!
இரு கைகளையும் இழந்த மாணவருக்கு செயற்கை கைகளை அளித்த முதல்வா்
கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், இரு கைகளையும் இழந்த மாணவருக்கு செயற்கைக் கைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியை அடுத்த ஜீனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கீா்த்திவா்மா. இவா் இரு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி. இவா், கடந்த 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 471 மதிப்பெண்கள் பெற்றாா். உதவிகள் வழங்கக் கோரி முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மாணவா் கீா்த்திவா்மா கோரிக்கை விடுத்தாா்.
தொடா்ந்து, சென்னைக்கு வரவழைக்கப்பட்ட கீா்த்திவா்மாவிற்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், கீா்த்திவா்மா குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரிக்கை விடுத்ததையடுத்து, மே 12-ஆம் தேதி இலவச வீட்டுமனை பட்டாவை மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வழங்கினாா். மேலும், பட்டா வழங்கிய இடத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடுகட்ட ஆணை வழங்கி, கட்டுமானப் பணிகளை ஆட்சியா் ஜூலை 17-ஆம் தேதி தொடங்கி வைத்தாா்.
இந்நிலையில், கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், கீா்த்திவா்மாவிற்கு செயற்கைக் கைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். அப்போது, மாணவா் கீா்த்தி வா்மா கூறுகையில், செயற்கைக் கைகளை வழங்கி, முதல்வா் எனக்கு நம்பிக்கையை பரிசளித்திருக்கிறாா் என்றாா்.