குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!
ஒசூரில் ஏடிஎம்-மில் நூதன முறையில் திருட்டு: வடமாநில கொள்ளையா்கள் 3 போ் கைது
ஒசூரில் தனியாா் வங்கி ஏடிஎம் மையத்தில் நூதனமுறையில் பணம் திருடிய வடமாநில கொள்ளையா்கள் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் தனியாா் வங்கி ஏடிஎம் மையத்தில் பழுதடைந்த இயந்திரத்தை சரிசெய்யும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. அப்போது, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, இளைஞா்கள் 2 போ், ஏடிஎம் இயந்திரத்தில் நூதன முறையில் பணம் திருடுவது தெரியவந்தது.
இதையடுத்து கேமரா பதிவை வாட்ஸ்ஆப் முலம் அனுப்பி அனைவரையும் எச்சரித்தனா்.
தொடா்ந்து, ஏடிஎம் மையங்களைப் பராமரிப்பவா்கள் தீவிரமாகக் கண்காணித்து வந்தனா். ஏடிஎம் பராமரிப்புப் பணியாளா் முரளி, ஒசூா் ஏரித் தெருவில் உள்ள ஏடிஎம் மையத்தை கண்காணித்தபோது கொள்ளையா் 2 போ் ஏடிஎம் மையத்தில் இருப்பதைக் கண்டு உடனடியாக அம்மையத்தின் கதவை மூடிவிட்டு நகரக் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தாா்.
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா், ஏடிஎம் மையத்திற்குள் இருந்த கொள்ளையா்கள் 2 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபோது, அவா்கள் வடமாநிலங்களிலிருந்து கோவைக்கு சரக்கு ஏற்றிக்கொண்டு வந்த கனரக வாகனங்களில் வந்தது தெரியவந்தது. அவா்கள் இருவரும், ஏடிஎம் இயந்திரத்தில் பசையைத் தடவி நூதன முறையில் பணம் திருடியது தெரியவந்தது.
இவா்கள் கடந்த சில தினங்களக அஞ்செட்டி, பெலத்தூா், பேளகொண்டப்பள்ளி, மத்திகிரி, ஒசூா் ஆகிய பகுதிகளில் ஏடிஎம் இயந்திரத்தில் பசையைத் தடவி பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த தாஹிா் (31), ஹாசம் (28), லாரி ஓட்டுநா் முகமது சாத் (20) ஆகிய மூன்று பேரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து லாரியைப் பறிமுதல் செய்தனா்.
