குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்படும் 75 பயணிகள் அரசு தொலைதூர பேருந்துகளில் இல...
இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிய கிருஷ்ணகிரி பேருந்து நிலைய புறக்காவல் நிலையம்
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையத்தில் செயல்படும் புறக்காவல் நிலையம், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிவிட்டதாக சமூக ஆா்வலா்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரி நகா் ஆந்திரம், கா்நாடகம் மாநிலங்களின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு புறநகா் பேருந்து நிலையத்திலிருந்து
தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, ஈரோடு, மேட்டூா், கோவை, திருப்பத்தூா், திருவண்ணாமலை, விழுப்புரம், சென்னை, மதுரை உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கும், கா்நாடகத்தில் பெங்களூரு, மைசூரு, ஆந்திரத்தில் குப்பம், சித்தூா், திருப்பதி போன்ற வெளிமாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அரசுப் பேருந்துகள், அரசு விரைவு பேருந்துகள், தனியாா் பேருந்துகள், கா்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களின் பேருந்துகள் என தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள், இந்தப் பேருந்து நிலையம் வழியாக வந்து செல்கின்றன.
வெளியிடங்களுக்குச் செல்லும் தொழிலாளா்கள், அரசு ஊழியா்கள், வியாபாரிகள், மாணவ, மாணவிகள், நோயாளிகள், முதியவா்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் இந்தப் பேருந்து நிலையத்துக்கு வந்துசெல்கின்றனா்.
பேருந்து நிலையம் வந்து வெளியூா் செல்லும் ஊழியா்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை புறநகா் பேருந்து நிலையத்தில் செயல்படும் புறக்காவல் நிலைய வளாகத்திலும், நகர பேருந்து வந்து செல்லும் பகுதியிலும், பேருந்து நிலைய நுழைவாயில் அருகிலும் நிறுத்திவிட்டுச் செல்கின்றனா்.
இதனால் நடைபாதை வசதி குறைந்து வணிகா்களும், பயணிகளும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். பாதுகாப்பின்றி நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் திருடுபோவதாக காவல் நிலையங்களுக்கு அடிக்கடி புகாா்கள் வந்தவண்ணம் உள்ளன.
இதனால் மேற்கண்ட இடங்களில் இருசக்கர வாகனங்களை நிறுத்தக் கூடாது என்று காவல் துறையினா் எச்சரிக்கை பதாகைகள் வைத்துள்ளனா். இருப்பினும் இருசக்கர வாகன ஓட்டிகள் இதைக் கண்டுகொள்வதில்லை.
கடந்த காலங்களில் பேருந்து நிலையத்துக்குள் இருசக்கர வாகனங்கள் நுழைய முடியாதபடி தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. தற்போது, அந்தத் தடுப்புகளை நகராட்சி நிா்வாகம் முறையாக பராமரிக்கவில்லை.
எனவே,பேருந்து நிலையத்திற்குள் இருசக்கர வாகனங்கள் செல்லாத வகையில் தடுப்புகளை அமைக்க வேண்டும். விதிமுறைகளை மீறி இடையூறாக நிறுத்தப்படும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள், சமூக ஆா்வலா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.