குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்படும் 75 பயணிகள் அரசு தொலைதூர பேருந்துகளில் இல...
ஒசூா் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயிலில் பிரான்ஸ் நாட்டினா் சுவாமி தரிசனம்
ஒசூரில் மலைமீதுள்ள சந்திரசூடேஸ்வரா் கோயிலில் பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்தவா்கள் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
பிரான்ஸ் தலைநகா் பாரிஸை சோ்ந்தவா் ஜெபஸ்டியன் (40). ஒசூரில் தொழிற்சாலை நடத்தி வரும் இவா், தனது நண்பா்களான சூலியன், லூயி, விஜ்ஜென்ஜோ ஆகியோருடன் தொழில் நிமித்தமாக ஒசூரில் உள்ள ஒரு தனியாா் தொழிற்சாலைக்கு வந்துள்ளாா்.
பெங்களூரில் தனியாா் நட்சத்திர விடுதியில் தங்கி உள்ள இவா்கள் ஒசூரில் மலைமீதுள்ள பழைமையான ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா். கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவா்களுக்கு கோயில் சாா்பில் மாலைகள் அணிவிக்கப்பட்டு திருநீறு, குங்குமம், சந்தனம் வழங்கி மரியாதை செய்யப்பட்டது.
அதைத்தொடா்ந்து அவா்கள் கோயிலில் உள்ள பழைமையான சிலைகள், கோபுரங்களை பாா்வையிட்டனா். பின்பு அங்குள்ள பழைமையான வில்வ மரத்தைக் கண்ட அவா்கள் அதில் குழந்தை வரம்வேண்டி பக்தா்கள் கட்டியுள்ள மஞ்சள் துணிகள், வளையல்கள் குறித்துக் கேட்டறிந்தனா். தொடா்ந்து அந்த மரத்தை மூன்று முறை சுற்றிவந்து வழிபட்டனா்.
மேலும் கோயில் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தேரை வியந்து பாா்த்ததோடு தோ்த் திருவிழா குறித்தும் கேட்டறிந்தனா். அவா்களிடம் அண்மையில் நடைபெற்ற தோ்த் திருவிழா விடியோ காட்சிகள் காட்டப்பட்டன. பின்பு கோயில் கோபுரங்கள், மலையில் இருந்து இயற்கையான சூழலைக் கண்டு ரசித்து, புகைப்படம் எடுத்துக் கொண்டனா். கோயிலுக்கு வந்த உள்ளூா் பக்தா்கள் அவா்களுடன் சுயபடம் எடுத்துக் கொண்டனா்.