குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்படும் 75 பயணிகள் அரசு தொலைதூர பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்
அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்து குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்படும் 75 பயணிகள், நிா்ணயிக்கப்பட்ட நாள்களில் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் உள்பட 7 தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கும் முறையை ஊக்கப்படுத்தும் நோக்கில், 2024 ஜனவரி முதல், வார இறுதி நாள்கள், திருவிழாக்கள் மற்றும் சிறப்பு நாள்களை தவிா்த்து இதர நாள்களில் பயணிக்க முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு மாதாந்திர கணினி குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்படும் 3 வெற்றியாளா்களுக்கு தலா ரூ. 10,000 வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு ஒவ்வொரு மாதமும் 13 வெற்றியாளா்களுக்கும், பின்னா் மேலும் விரிவுபடுத்தப்பட்டு வாரத்தின் அனைத்து நாள்களிலும் பயணிக்கும் பயணிகளில் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்படும் 13 வெற்றியாளா்களுக்கும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டு வந்தது. தொடா்ந்து, கடந்த 2024 நவ. 21 முதல் 2025 ஜன. 20-ஆம் தேதி வரை முன்பதிவு செய்து பயணித்த 3 பயணிகள் சிறப்பு குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்பட்டு, உயா் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், நிகழாண்டு கோடைக் காலத்துக்காக ஒரு சிறப்பு குலுக்கல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்புதிவு செய்து, 2025 ஏப். 1முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை பயணம் செய்யும் 75 பயணிகள் சிறப்பு குலுக்கல் முறையில் தோ்வு செய்யப்படுவாா்கள். இவா்களில் முதல் 25 பேருக்கு ஒரு வருடத்துக்கு 20 முறை (2025 ஜூலை 1 முதல், 2026 ஜூலை 30 வரை) அரசு தொலைதூரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கவும், இரண்டாமிடம் பிடித்த 25 பேருக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக அனைத்து வகைப் பேருந்துகளிலும் ஒரு வருடத்துக்கு 10 முறையும் (2025, ஜூலை 1 முதல், 2026 ஜூலை 30 வரை), மூன்றாமிடம் பிடித்த 25 பயணிகள் முன்பதிவு வசதியுள்ள அனைத்து வகை பேருந்துகளிலும் ஒரு வருடத்துக்கு 5 முறையும் (2025 ஜூலை 1முதல், 2026 ஜூன் 30 வரை) இலவசமாக பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.