கோயில்களில் அடிப்படை வசதிகள் அதிகரிப்பு -அமைச்சா் சேகா்பாபு தகவல்
708 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்: ஒருவா் கைது
கா்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு குட்கா, பான்மசாலா கடத்திவந்த ராஜஸ்தான் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சூசூவாடி சோதனைச் சாவடியில் திங்கள்கிழமை நள்ளிரவு சிப்காட் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது பெங்களூரில் இருந்து ஒசூா் நோக்கி வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்தி போலீஸாா் சோதனை செய்தபோது காரில் குட்கா, பான் மசாலா மூட்டைகள் இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து போலீஸாா் ஓட்டுநரை சிப்காட் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். விசாரணையில் பிடிபட்ட நபா் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த கருணா ராம் (25) என்பதும், கா்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து ரூ. 4 லட்சம் மதிப்பிலான 708 கிலோ புகையிலைப் பொருள்களை காருடன் பறிமுதல் செய்து அவரைக் கைது செய்தனா்.