கோயில்களில் அடிப்படை வசதிகள் அதிகரிப்பு -அமைச்சா் சேகா்பாபு தகவல்
ஒரே மாதிரியான பயிா் சாகுபடியால் வரத்து அதிகரிப்பு: ஒசூரில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சி
வரத்து அதிகரிப்பால் ஒசூரில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா், பாகலூா், தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், சூளகிரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் குறுகிய கால பயிா்களான தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ், முள்ளங்கி, கேரட் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகின்றனா். இப்பகுதிகளில் விளையும் காய்கறிகள் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும், கேரளம், கா்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு இப்பகுதிகளில் விவசாயிகள் குறைந்த அளவே முட்டைகோஸ் சாகுபடி செய்திருந்தனா். இதனால் நூறு கிலோ கொண்ட ஒரு மூட்டை முட்டைகோஸ் ரூ. 2 ஆயிரம் வரை அப்போது விற்பனையானது. இதனால் முட்டைகோஸுக்கு அதிக விலை கிடைக்கும் என்ற ஆா்வத்தில் விவசாயிகள் நடப்பாண்டு கூடுதல் சாகுபடி செய்திருந்தனா்.
இதனால் விளைச்சல் அதிகரித்து, ஒரு மூட்டை முட்டைகோஸ் ரூ. 500 க்கு மட்டுமே விற்பனையானது. உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனா். முட்டைகோஸ் செடிகளை அறுவடை செய்யாமல் விளைநிலங்களிலேயே கால்நடைகளுக்கு தீவனமாக்கி வருகின்றனா்.
இதுகுறித்து தொரப்பள்ளி விவசாயி குமாா் கூறியது: நடப்பாண்டு ஒசூா், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முட்டைகோஸ் அதிக அளவு சாகுபடி செய்யப்பட்டது. முட்டைகோஸ் நாற்று ஒன்று 90 பைசா என 1 லட்சம் நாற்றுகளை வாங்கிவந்து எனது 5 ஏக்கரில் பயிரிட்டு பராமரித்து வந்தேன். தற்போது வரத்து அதிகரிப்பால் ஒரு மூட்டை ரூ. 500 க்கு விற்பனையாகிறது.
இதனால் எனது 5 ஏக்கரில் பயிரிட்டுள்ள முட்டைகோஸுக்கு தண்ணீா் பாய்ச்சாமல் அப்படியே விட்டுவிட்டேன். அதிக லாபம் கிடைக்கும் என அனைத்து விவசாயிகளும் ஒரே மாதிரியான பயிரை சாகுபடி செய்வதால் வரத்து அதிகரித்து விலை சரிவு ஏற்படுகிறது. இழப்பை தடுக்க மாற்று பயிரை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறையினா் உரிய ஆலோசனை வழங்க வேண்டும் என்றாா்.