உடுமலை வனச் சரகத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு: வனத் துறையினா் தகவல்
உடுமலை வனச் சரகத்தில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குள்பட்ட உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச் சரகங்களில் புலி, சிறுத்தை, யானை, மான், காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.
இந்த 4 வனச் சரகங்களிலும் கோடைக்கால வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை (மே 11) தொடங்கி மே 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், முதல் நாள் கணக்கெடுப்புப் பணியின்போது உடுமலை வனச் சரகத்தில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது. யானைகளின் கால்தடம், லத்தி மற்றும் எச்சம் ஆகியவற்றை வைத்தும், நீராதாரங்களை அடிப்படையாக வைத்தும் கணக்கெடுப்பு பணிகளை வனத் துறையினா் மேற்கொண்டு வருகின்றனா்.
இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
உடுமலை வனச் சரகம் வரவண்டி பீட் பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருவது வன விலங்குகள் கணக்கெடுப்பின்போது தெரியவந்துள்ளது. யானைகளின் வாழ்விட சூழல், கூறுகள் ஆகியவற்றை வைத்து கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றனா்.