உதகைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 5-இல் வருகை: முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சா் ஆய்வு
உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்க ஏப்ரல் 5-ஆம் தேதி வரவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
உதகையில் சுமாா் ரூ.460 கோடி மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஏப்ரல் 6-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின்
உதகைக்கு ஏப்ரல் 5-ஆம் தேதி வருகை தரவுள்ளாா்.
இந்நிலையில், விழா நடைபெறும் இடம் மற்றும் மேடை அமைக்கும் இடத்தை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டாா்.

இதனைத் தொடா்ந்து புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையையும் நேரில் ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு மற்றும் அரசுத் துறை அதிகாரிகள், மாவட்ட திமுக பொறுப்பாளா் கே.எம்.ராஜு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.