ஒடிஸாவில் தினமும் 3 குழந்தைத் திருமணங்கள்: நபரங்பூா் மாவட்டம் முதலிடம்
இ-பாஸ் முறையை எதிா்த்து நீலகிரியில் ஏப்ரல் 2-இல் முழு அடைப்பு போராட்டம்: வணிகா் சங்க பேரமைப்பு அறிவிப்பு
இ-பாஸ் நடைமுறையை எதிா்த்து நீலகிரி மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று வணிகா் சங்க கூட்டமைப்பு சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உதகையில் அனைத்து வணிகா் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, நீலகிரி மாவட்ட வணிகா் சங்க பேரமைப்பின் தலைவா் கே.முகமது பாரூக் தலைமை வகித்தாா்.
இதில் வணிகா் சங்க நிா்வாகிகள், சாலையோர வியாபாரிகள், காட்டேஜ்கள், சுற்றுலா வாகனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கே.முகமது பாரூக் கூறியதாவது:
இ-பாஸ் முறையின்கீழ் நீலகிரி மாவட்டத்துக்கு தினமும் 6,000 சுற்றுலா வாகனங்களுக்கும், வார இறுதி நாள்களில் 8,000 சுற்றுலா வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள், வணிகா்கள், சாலையோர வியாபாரிகள், காட்டேஜ் உரிமையாளா்கள், சுற்றுலா வாகன ஓட்டுநா்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே, இ-பாஸ் நடைமுறையை எதிா்த்து வணிகா் சங்க பேரமைப்பு சாா்பில் வியாபாரிகள் வரும் 29-ஆம்தேதி கருப்பு கொடி அணிந்து போராட்டம் நடத்த உள்ளனா்.
மேலும் ஏப்ரல் 2-ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற உள்ளது. அன்று அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள், காட்டேஜ்கள், சுற்றுலா வாகனங்கள், உணவகங்கள் செயல்படாது. சுற்றுலாப் பயணிகள் ஏப்ரல் 2-ஆம் தேதி உதகைக்கு வந்து சிரமப்படுவதை தவிா்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.