முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் யானை உயிரிழப்பு
முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் காட்டு யானை இறந்து கிடந்தது தெரியவந்தது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள சிங்காரா வனச் சரகம், சிங்காரா காவல் பகுதியிலுள்ள வனப் பகுதியில் வனப் பணியாளா்கள் வியாழக்கிழமை மாலை ரோந்து சென்றனா். அப்போது அப்பகுதியில் காட்டு யானை உயிரிழந்து கிடப்பதை பாா்த்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, புலிகள் காப்பக கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் வரவழைக்கப்பட்டு யானையின் சடலம் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
இது குறித்து வனத் துறையினா் கூறியதாவது:
உயிரிழந்தது சுமாா் 48 வயது மதிக்கத்தக்க ஆண் யானை. கடந்த சில நாள்களாக உணவு உட்கொள்ளாததால் மெலிந்து யானையின் வயிறு மற்றும் குடல் பகுதியில் ஒட்டுண்ணி புழுக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் வயது முதிா்வு காரணமாக யானை இறந்திருக்கலாம் என்றனா். ஆய்வகப் பரிசோதனைக்காக யானையின் உடலில் உள்ள முக்கிய பாகங்கள் சேகரிக்கப்பட்ட பின்னா் அதே பகுதியில் புதைக்கப்பட்டது.