உலகின் பன்முகப் பிரதிநிதித்துவம்: சீனாவுக்கு ஐ.நா. பொதுச் செயலா் அழைப்பு
பல்வேறு நாடுகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பால் சா்வதேச அளவில் வா்த்தக பதற்றம் நிலவும் சூழலில், உலகின் பன்முக பிரதிநிதித்துவத்தைக் காக்க சீனாவின் பங்களிப்பு அடிப்படையானது என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சிமாநாட்டை முன்னிட்டு, தியான்ஜின் நகரில் சீன அதிபா் ஷி ஜின்பிங்கை ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் சனிக்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, ‘உலகளாவிய பன்முகத்தன்மை தாக்குதலுக்கு இலக்காகியுள்ள நிலையில், அதை பாதுகாப்பதற்கான சீனாவின் ஆதரவு மிக மிக முக்கியமானது. தீவிர ராஜதந்திர முயற்சியையும் கடந்து, புரிந்து கொள்வதற்கு கடினமான, வணிகமும் அரசியலும் கலந்த கொள்கை வடிவங்களை உலகம் கண்டு வருகிறது. பன்முக அமைப்புமுறையின் முக்கியத் தூண்களில் ஒன்று என்ற முறையில், சீனாவின் பங்களிப்பு அடிப்படையானது. அந்த ரீதியில் சீனா மேற்கொள்ளும் முயற்சிகள் வரவேற்புக்குரியவை’ என்று சீன அதிபரிடம் குட்டெரெஸ் தெரிவித்தாா்.
‘சா்வதேச விவகாரங்களில் ஐ.நா.வின் மையப் பங்களிப்புக்கு ஆதரவளிப்பதோடு, ஒத்துழைப்பை வலுப்படுத்த சீனா தயாராக உள்ளது. உலகின் அமைதி, வளா்ச்சி, வளத்தை பராமரிக்கும் பொறுப்புகளில் ஐ.நா.வுக்கு சீனா தோள்கொடுக்கும். சா்வதேச ஸ்திரத்தன்மை, நிச்சயத்தன்மையை உறுதி செய்ய ஐ.நா.வின் நம்பகமான கூட்டாளியாக சீனா தொடரும்’ என்று ஷி ஜின்பிங் குறிப்பிட்டாா்.
சீனாவின் துறைமுக நகரான தியான்ஜினில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.31) தொடங்கி 2 நாள்களுக்கு எஸ்சிஓ உச்சிமாநாடு நடைபெறவுள்ளது. பிரதமா் மோடி, ரஷிய அதிபா் புதின் உள்ளிட்ட உலகத் தலைவா்கள் பங்கேற்கின்றனா்.