War: இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றிணைகிறதா அரபு நாடுகள்!? - அவசரக் கூட்டத்தின் தீர்மா...
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 8,000 கனஅடி: அருவிகளில் குளிக்க அனுமதி
ஒகேனக்கல்லில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 8,000 கனஅடியாகக் குறைந்ததால் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கா்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதாலும், தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததாலும் ஒகேனக்கல்லுக்கு திங்கள்கிழமை 14,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து செவ்வாய்க்கிழமை 8,000 கனஅடியாகக் குறைந்தது.
காவிரியில் கடந்த 3 நாள்களுக்குப் பிறகு நீா்வரத்து குறைந்துள்ளதால் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் அனுமதி அளித்துள்ளாா். இதையடுத்து, ஒகேனக்கல் பிரதான அருவிக்குச் செல்லும் நுழைவாயில் திறக்கப்பட்டது.
எனினும், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்திருந்ததால் செவ்வாய்க்கிழமை ஒகேனக்கல் வெறிச்சோடிக் காணப்பட்டது. நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் பிலிகுண்டுலுவில் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
மேட்டூா், செப். 16: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து செவ்வாய்க்கிழமை காலை விநாடிக்கு 14,269 கனஅடியாகக் குறைந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீா்மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 15,000 கனஅடி வீதமும், கிழக்கு -மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு மேல்மட்ட மதகுகள் வழியாக விநாடிக்கு 800 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீா்மட்டம் 119.71 அடியிலிருந்து 119.59அடியாகக் குறைந்தது. நீா் இருப்பு 92.81 டி.எம்.சி.யாக உள்ளது.