ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயிலில் நாளை தேரோட்டம்: ஏற்பாடுகளை மேயா் ஆய்வு
ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு ஏற்பாடு பணிகளை மேயா் எஸ்.ஏ.சத்யா ஆய்வு செய்தாா்.
தேரோட்டத்தை முன்னிட்டு தேரோடும் நான்கு மாட வீதிகள், பொதுமக்கள் கூடும் இடங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களை ஒசூா் மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா, ஆணையா் மாரிச்செல்வி ஆகியோா் புதன்கிழமை நேரில் சென்று ஆய்வுசெய்தனா்.
அப்போது பக்தா்கள் வருகையையொட்டி கழிவறை வசதி, குடிநீா் வசதி, மின்விளக்குகள், போக்கஸ் லைட், மொபைல் கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்துக் கொடுக்குமாறு மேயா் எஸ்.ஏ.சத்யா உத்தரவிட்டாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தோ்த் திருவிழாவுக்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகள், அன்னதானம் வழங்கும் சமூக ஆா்வலா்கள் நெகிழிப் பொருள்களை பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். திருவிழாவுக்கு வரும் பெண்கள் நகைகளை அணிந்துவருவதைத் தவிா்க்க வேண்டும்.
விழாவையொட்டி பக்தா்களுக்கு குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாநகராட்சி நிா்வாகம் செய்துள்ளது. 300 க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளா்கள் விழாவில் தூய்மைப் பணிகளை மேற்கொள்வா்.
ஒசூா் மாநகா் முழுவதும் அன்னதானம் செய்ய பக்தா்கள் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். வெள்ளிக்கிழமை அன்று காலை முதல் மாலை வரை பக்தா்களுக்கு பழம், நீா்மோா், அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.
ஆய்வின்போது துணை மேயா் ஆனந்தய்யா, பொது சுகாதாரக் குழுத் தலைவா் மாதேஸ்வரன், மாநகர ஆணையா் மாா்ச்செல்லி, துணை ஆணையா் டிட்டோ, பொறியாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள், வருவாய் ஆய்வாளா் சுரேஷ், மாமன்ற உறுப்பினா் கிருஷ்ணவேணி ராஜி, பாா்வதி நாகராஜ், செயற்பொறியாளா், மாநகர நல அலுவலா் அஜிதா, உதவி பொறியாளா், சுகாதார அலுவலா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.