ஒசூா், சூளகிரி பகுதிகளுக்கு மூன்று நாள்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீா் நிறுத்தம்
ஒசூா், சூளகிரி, வேப்பனப்பள்ளி, அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளுக்கு மாா்ச் 17 முதல் 19-ஆம்தேதி வரை 3 நாள்களுக்கு ஒனேக்கல் கூட்டு குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், ஒசூா் திட்டப் பராமரிப்பு கோட்டம் மூலம் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் மூலமாக ஒசூா் மாநகராட்சி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை பேரூராட்சிகள், கெலமங்கலம், ஒசூா், சூளகிரி, வேப்பனப்பள்ளி, தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியங்களுக்கு உள்பட்ட 169 ஊராட்சிகளில் உள்ள 1,866 குடியிருப்புகளுக்கு தினசரி ஒகேனக்கல் கூட்டு குடிநீா் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் கெலமங்கலம் ஒன்றியம், ராயக்கோட்டை அருகிலும், ஒசூா் மாநகராட்சியில் மத்திகிரி அருகே சாலை பணியின்போது புதிதாக பதிக்கப்பட்ட குழாய்களை ஏற்கெனவே இருந்தபடி ஒன்றொடு ஒன்று இணைக்க வேண்டியுள்ளது.
இந்தப் பணிகளுக்காக மாா்ச் 17 முதல் 19- ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு மட்டும் ஒசூா் மாநகராட்சி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை பேரூராட்சிகள், கெலமங்கலம், ஒசூா், சூளகிரி, வேப்பனப்பள்ளி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 167 ஊராட்சிகளில் உள்ள 1,766 குடியிருப்புகளுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீா் வழங்க இயலாது. எனவே, இப்பகுதிகளில் அடுத்த மூன்று நாள்களுக்கு மக்கள் உள்ளூா் நீா் ஆதாரங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.