"ஓ.பன்னீர்செல்வத்தின் மீது நம்பிக்கை இல்லாமல்தான் ஜெயலலிதா இருந்தார்..." - ஆர்.பி.உதயகுமார்
"டாக்டர் வெங்கடேஷ் சோபாவில் அமர்ந்திருந்தபோது இந்த உதயகுமார் எந்த இடத்தில் இருந்தார்" என்று, நேற்று ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு பதிலளித்து ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்ட அறிக்கையில்,

"ஓ.பன்னீர்செல்வம் அதிகாரம் வேண்டுமென்றால் அமைதியாக இருப்பார். அதிகாரம் இல்லையென்றால் எந்த எல்லைக்கும் போவார். ஓ.பி.எஸ்-க்கு நான் நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன். ஜெயலலிதா தனக்கு நற்சான்று கொடுத்தார் என்று அடிக்கடி தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்.
இவர்தான் அதிகாரம் மையம் என்று சொல்லிக் கொண்டிருந்தபோது, 2010 ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு உரிமை போராட்டத்திற்கு இவரை தள்ளி வைத்துவிட்டு இந்த சாமானிய உதயகுமாரைத் தான் தலைமை தாங்க ஜெயலலிதா உத்தரவிட்டார்.
அன்று முதல் தன் அதிகாரத்திற்கு போட்டியாகவோ, இணையாகவோ, துணையாகவோ, அல்லது பின்னாலோ, முன்னாலோ எந்த வடிவத்திலும் யாரும் வந்துவிடக் கூடாது என்பதற்காக அவர் எடுத்த ஒவ்வொரு முயற்சியையும் அவருடைய மனசாட்சிக்கும், தெய்வ சாட்சிக்கும் விட்டுவிடுகிறேன்.
2010 ஆம் ஆண்டு தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தியபோது, இவரை தள்ளி வைத்துவிட்டு என்னை அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள ஆணையிட்டார்கள்.
2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றவுடன், தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் குடும்ப விழாவில் வாழ்த்து செய்தியையும், பரிசையும் கொடுப்பதற்கு எனக்கு ஆணையிட்டார்கள் என்பதையும் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் வெற்றி வாய்ப்பு நழுவிப் போனபோது தேனி மாவட்டத்தில் மட்டும் இரட்டை இலை மலர்ந்ததற்கு இந்த சாமானிய தொண்டனுடைய விசுவாசமான உழைப்பை நீங்கள் வேண்டுமானால் மறந்திருக்கலாம். நேரம் இருந்தால் எளிய தொண்டனிடம் விசாரித்து பாருங்கள்.
ஜெயலலிதா தங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கை குறைவையும், அவர் வைத்திருந்த அபிமானத்தையும் அப்போது சாமானிய தொண்டனான என்னிடம் பகிர்ந்து கொண்டார்கள், அதை நான் வெளியே சொன்னால் அரசியல் நாகரிகமாக இருக்காது.
அ.தி.மு.க வளர்ச்சிக்காக கோடிக்கணக்கான தொண்டர்கள் தங்கள் உதிரத்தை சிந்தி வளர்த்து, இன்று மாபெரும் மக்கள் இயக்கமாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டால், இந்த நிமிடமே தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் என்னை விடுவித்துக்கொள்ள நான் தயங்கவில்லை.
நான் பதவிக்காகவோ அதிகாரத்திற்காகவோ ஒரு நாளும் ஆசைப்பட்டவன் அல்ல. இந்த பொறுப்புகள் எல்லாம் விசுவாசத்தோடு பணியாற்றியதற்காக தலைமை என்னை தேடிக் கொடுத்த பதவிகள் தானே தவிர, தேடிப்போய் பெற்றவை அல்ல.
அன்றைக்கு ஜெயலலிதா இருந்தபோது டாக்டர் வெங்கடேஷ் சோபாவில் அமர்ந்திருந்தபோது இந்த உதயகுமார் எந்த இடத்தில் அமர்ந்திருந்தார் என்று சொன்னால், அரசியல் நாகரிகமாக இருக்காது என்று சொல்லி உள்ளீர்கள். உங்களுடன் எந்த நிலையில் அமர்ந்திருந்தேன் என்பதை சொல்லுங்கள், நீங்கள் அமர்ந்திருந்த இடத்திலே தான் நானும் அமர்ந்திருந்தேன்.
களங்கம் கற்பிக்க முயற்சிப்பதை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒற்றுமைக்கு எதிரானவர்கள் என்ற பிரச்சனையை திசை திருப்புகிற வகையில் நீங்கள் பேசி வருவது ஆண்டவனுக்கே பொறுக்காது. கோடான கோடி அப்பாவி தொண்டர்களையும், தமிழக மக்களையும் இனியும் நீங்கள் ஏமாற்றக் கூடாது. உங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்வீர்கள். கட்சி ஒற்றுமையாக இருப்பதற்கு யாருமே தடையாக இல்லை அதை தொண்டர்களும் தமிழ்நாட்டு மக்களும் நன்கு அறிவார்கள்.
எத்தனை முறை சமாதான பேச்சு வார்த்தைகள் நடத்தினோம். ஆனால் இன்றைக்கு ஒற்றுமைக்கு நாங்கள் தடையாக இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள்.
பலாப்பழத்தில் போட்டியிட்டதற்கு யார் காரணம்? மத்திய அமைச்சராகி விடலாம் என்ற பதவி ஆசையினால் என்ற விவரங்களும் தெரியும். தேனி மாவட்டத்தில் அதிகாரம் தங்கள் பிள்ளைக்கு வேண்டும் என்றுதான் நினைத்தீர்கள், யாரையாவது உருவாக்கி உள்ளீர்களா? இரட்டை இலை என்பது நம் வாழ்வுக்கு சமம், அதை எதிர்த்து நிற்பது இறப்புக்கு சமம்." என்று தெரிவித்துள்ளார்.