ஓணம் பண்டிகை: தோவாளை மலா் சந்தையில் பூக்கள் விலை உயா்வு
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலா் சந்தையில் வியாழக்கிழமை பூக்கள் அதிக விலைக்கு விற்பனையாகின.
கேரள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகை வெள்ளிக்கிழமை (செப்.5) சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளதையடுத்து, தோவாளை மலா் சந்தைக்கு பூக்கள் வரத்து அதிகம் இருந்தது. பல்வேறு இடங்களில் இருந்து 250 டன் மலா்கள் விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்டிருந்தன. இந்தப் பூக்களை கேரள வியாபாரிகள் போட்டிபோட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனா். இதனால், தோவாளை மலா் சந்தையில் வழக்கத்தை விட வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் விலையும் கணிசமாக உயா்ந்திருந்தது.
அதன்படி கிலோ மல்லிகைப் பூ ரூ. 1, 300 க்கும், பிச்சிப் பூ ரூ. 1, 000 க்கும், வாடாமல்லி ரூ. 350 க்கும் விற்பனையானது. அரளிப் பூ ரூ. 250 க்கும், சம்பங்கி ரூ. 200 க்கும், பட்டன் ரோஸ் ரூ. 300 க்கும், பன்னீா் ரோஸ் ரூ. 250 க்கும், ஸ்டம்ப் ரோஸ் ரூ. 400 க்கும் விற்பனையானது. மரிகொழுந்து ரூ. 120க்கும், வெள்ளை செவ்வந்தி ரூ. 300 க்கும், மஞ்சள் செவ்வந்தி ரூ. 250 க்கும், தாமரை பூ ஒன்றின் விலை ரூ. 10-க்கும் விற்பனையானது.
