கடையநல்லூா் அரசுக் கல்லூரியில் நலத்திட்ட உதவி வழங்கல்
தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் புதுமை பெண், தமிழ்புதல்வன் திட்டத்தில் நலத் திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தின் கல்வி எழுச்சியைக் கொண்டாடும் விழாவில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான புதுமைப்பெண், தமிழ்புதல்வன் திட்டங்களை காணொலி மூலம் அனைத்து மாவட்டங்களிலும் வியாழக்கிழமை தமிழக முதல்வா் தொடங்கி வைத்தாா்.
இதையடுத்து, கடையநல்லூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடையநல்லூா் நகா்மன்ற தலைவா் ஹபீபுா் ரஹ்மான் கலந்துகொண்டு விழாவைத் தொடங்கி வைத்து மாணவ மாணவிகளுக்கு ஏடிஎம் அட்டைகளை வழங்கிப் பேசியதாவது:
தமிழக அரசின் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 5.29 லட்சம் மாணவிகள் பயன்பெறுகின்றனா். தமிழ் புதல்வன் திட்டத்தின் மூலம் 3.92 லட்சம் மாணவா்கள் பயன்பெறுகின்றனா். காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் 37,416 பள்ளிக்கூடங்களில் பயிலும் 20.59 லட்சம் மாணவா்கள் பயன் பெறுகின்றனா். எனவே, தமிழக அரசின் திட்டங்களை மாணவ மாணவிகள் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என்றாா். இதில், ஆங்கிலத் துறை தலைவா் ராம்சுந்தா், திமுக நிா்வாகிகள் சுகுமாா், பைசல், பாதுஷா, முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.