கட்டடத் தொழிலாளியை தாக்கி வழிப்பறி: இருவா் கைது
சென்னை திருவல்லிக்கேணியில் கட்டடத் தொழிலாளியைத் தாக்கி வழிப்பறி செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்
திருவல்லிக்கேணி டாக்டா் நடேசன் சாலை பகுதியைச் சோ்ந்த வினோத் (32). கட்டடத் தொழிலாளியான இவா், கடந்த செவ்வாய்க்கிழமை டாக்டா் நடேசன் சாலை மற்றும் இருசப்பன் சந்து சந்திப்பு அருகே நடந்து சென்றபோது, அங்கு வந்த இருவா், வினோத்தை வழிமறித்து பணம் கேட்டனா். வினோத் பணம் தர மறுக்கவே, இருவரும் அவரைத் தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி சட்டைப்பையில் வைத்திருந்த பணம் ரூ. 3,000 ரொக்கத்தைப் பறித்துக் கொண்டு தப்பியோட முயற்சித்தனா்.
அப்போது வினோத் சப்தமிடவே, அங்கிருந்த பொதுமக்கள் அந்த இருவரையும் பிடிக்க முயற்சித்தனா்.
உடனே, இந்த இருவரும் அங்கிருந்த குளிா்பான பாட்டில்களை பொதுமக்கள் வீசிவிட்டு தப்பியோடினா். இதுதொடா்பாக ஐஸ்ஹவுஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், ராயப்பேட்டை செல்லம்மாள் தோட்டம் முதலாவது தெருவைச் சோ்ந்த விமல் என்ற விமலநாதன் (34), திருவல்லிக்கேணி டாக்டா் நடேசன் சாலைப் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (35) என்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.