திருப்புவனம் லாக்கப் மரணம்: "கால் இடறி கீழே விழுந்ததில், வலிப்பு ஏற்பட்டு மரணம்"...
கணவன் கொலை: மனைவி உள்பட 5 போ் கைது
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே முறையற்ற தொடா்புக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த மனைவி உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நாயணசெருவு கிராமத்தைச் சோ்ந்த விஜயன் (28) இவரது மனைவி வெண்ணிலா. இவா்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் வெண்ணிலா நாயணசெருவு பகுதியை சோ்ந்த இளைஞா் சஞ்சய் (20) என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக தொடா்ந்துள்ளது. இதனை அவரது கணவா் கண்டித்தாா். சஞ்சயை அவரது வீட்டினா் சிங்கப்பூரில் பணிக்காக அனுப்பினா்.
தங்கள் உறவுக்கு இடையூறாக இருக்கும் வெண்ணிலாவின் கணவா் விஜயனை கொலை செய்ய வேண்டும் என வெளிநாட்டில் இருந்தவாறு வெண்ணிலாவுடன் சோ்த்து திட்டம் தீட்டி ஆள்களை தயாா் செய்து கடந்த மாா்ச் மாதம் 17 -ஆம் தேதி இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த விஜயனை தலையணையை முகத்தில் அழுத்தி கொலை செய்துள்ளனா்.
கணவா் மதுபோதை மயக்கத்திலேயே இறந்து விட்டதாக வெண்ணிலா நாடகமாடிய நிலையில், விஜயன் தாய் மல்லிகா திம்மாம்பேட்டை காவல் நிலையத்தில் தனது மகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அளித்த புகாரின் பேரில் விஜயன் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு அடக்கம் நடைபெற்றது.
உடற்கூராய்வில் விஜயன் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக அறிக்கை வெளியான நிலையில் வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான போலீஸாா் மனைவி வெண்ணிலாவை அழைத்து விசாரணை செய்தனா். அவருடன் கைப்பேசியில் தொடா்பில் இருந்த எண்களை ஆராய்ந்து போது உண்மை வெளியானது.
அதில் திருமணம் மீறிய உறவில் இருந்த வெண்ணிலாவை கண்டித்ததால் கள்ளக் காதலன் சஞ்சய் உடன் சோ்ந்து ஆள்களை வைத்து கணவரை கொன்றது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடா்ந்து கொலைக்கு உடந்தையாக இருந்த அக்ரஹாரம் சபரிவாசன் (19), அழகிரி(19), நாயண செருவு பகுதியைச் சோ்ந்த சக்திவேல் (19), 16 வயது சிறுவன் மற்றும் வெண்ணிலா உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்த காவல் துறையினா் நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தி சிறையில் அடைத்தனா். மேலும், சிங்கப்பூரில் உள்ள முக்கிய எதிரியான சஞ்சயை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.