கன்னியாகுமரியில் 2,868 பேருக்கு பணி நியமன ஆணை: ஆட்சியா்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களில் 2 ஆயிரத்து 868 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.
மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், நான் முதல்வன், மாவட்ட திறன் மேம்பாட்டு நிறுவனம், அஸ்காா்டியா நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில், தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு உடனடி பணி நியமன ஆணைகளை வழங்கி ஆட்சியா் பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 8 சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 6,037 வேலைநாடுநா்கள் கலந்து கொண்டனா். இதில், 2,868 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆக. 30ஆம் தேதி நடைபெற்ற முகாமில், சென்னையைச் சோ்ந்த 2 நிறுவனங்களும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 7 நிறுவனங்களும் கலந்து கொண்டன. இதில், கலந்து கொண்ட 180 பேரில், 30 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
கல்வி கற்ற மாணவா்களுக்கு சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் நல்ல வாய்ப்புகளை உருவாக்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என்றாா்.
மாவட்ட திறன் அலுவலக உதவி இயக்குநா் லட்சுமிகாந்தன், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க திருநெல்வேலி மண்டல திட்ட மேலாளா் ஜிஜின் துரை, நிறுவனங்களைச் சாா்ந்த மனித வள அலுவலா்கள் உள்ளிட்டோா் முகாமில் கலந்து கொண்டனா்.