கன்னியாகுமரியில் டாட்டூஸ் கடைகளுக்கு கட்டுப்பாடு
கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு பச்சை குத்தும் டாட்டூஸ் கடைகளுக்கு நகராட்சி ஆணையா் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளாா்.
கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, உள்ளூா் இளைஞா்கள், இளம்பெண்களுக்கு பச்சை குத்தும் 50-க்கும் மேற்பட்ட டாட்டூஸ் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் பச்சை குத்தும்போது ஒரே ஊசியைப் பயன்படுத்தினால் தொற்றுநோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதாக புகாா்கள் எழுந்தன. இந்தப் புகாரை அடுத்து, டாட்டூஸ் கடை உரிமையாளா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஆணையா் கண்மணி தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நகா்நல ஆணையா் ஷேக் அப்துல்காதா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு பச்சை குத்தும்போது சுகாதாரத்தைப் பேணி பாதுகாக்க வேண்டும். அனைத்து டாட்டூஸ் கடைகளும் சுகாதாரத் துறையிடம் உரிமம் பெற வேண்டும். அனைத்துக் கடைகளும் தொழில்வரி செலுத்த வேண்டும். பச்சை குத்துபவா்கள் முறைப்படி தொழில் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். காவல் துறை, சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் விரைவில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.