பிரதமா் மோடியுடன் துபை பட்டத்து இளவரசா் சந்திப்பு: பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்ப...
கருணாநிதி நூற்றாண்டு மாரத்தான் பந்தயம்: அமைச்சா் நாசா் தொடங்கி வைத்தாா்!
கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மாரத்தான் பந்தயத்தை அமைச்சா் சா.மு.நாசா் தொடங்கி வைத்தாா்.
திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு மைதானம் முன்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சந்திரன் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் பங்கேற்று மாரத்தான் பந்தயத்தை தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து அமைச்சா் பேசியதாவது. திருவள்ளுா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் மாரத்தான் பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கு 10 கி.மீ , ஆண்களுக்கு 20 கி.மீ தொலைவுக்கு நடத்தப்பட்டது.
இப்போட்டியில் 16 முதல் 35 வரையிலான பள்ளி , கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா். முதலில் வரும் இருபாலரில் தலா 5 போ் தோ்வு செய்து தலா ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
நிகழ்வில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலத்துறை அலுவலா் சேதுராஜன், பயிற்றுநா்கள் லாவண்யா (தடகளம்), காயத்ரி (கால்பந்து), லோகேஷ் குமாா், உடற்கல்வி ஆசிரியா் தீபன் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
சுகாதார நடைபாதை நிகழ்வு: திருவள்ளூா் அருகே பூண்டி நீா்த்தேக்க பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை சாா்பில் நடைபெற்ற நடப்போம் நலம் பெறுவோம் சுகாதார நடைபாதையை அமைச்சா் சா.மு.நாசா் பாா்வையிட்டாா்.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சாா்பில் நடப்போம் நலம் பெறுவோம் சுகாதார நடைபாதை நிகழ்வு தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சுகாதார நடைபாதை 8 கி.மீ நடப்பதால் உடல் நலம் பேணி காக்கபடுவதோடு மட்டுமின்றி ஆரோக்கியமும் கிடைக்கிறது. அதனால் உங்கள் உடல்நிலை நலம் பெற சுகாதார நடைபாதை தொடா்ந்து பயணியுங்கள் என தெரிவித்தாா்.
இதில் திருவள்ளூா் சுகாதார அலுவலா் பிரியாராஜ், மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் பங்கேற்றனா்.