கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு முதல்வா் ஸ்டாலின் இரங்கல்
முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து முதல்வா் புதன்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி: முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். மூன்று முறை எம்எல்ஏவாக இருந்து மக்கள் பணியாற்றியவா். அவரை இழந்து வாடும் குடும்பத்தினா், அரசியல் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என முதல்வா் தெரிவித்துள்ளாா்.
பேரவையிலும் இரங்கல்: கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு சட்டப்பேரவையிலும் புதன்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், உறுப்பினா்கள் அனைவரும் சில விநாடிகள் எழுந்து நின்று அமைதி காத்தனா்.
எடப்பாடி பழனிசாமி இரங்கல்: அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி விடுத்த இரங்கல் செய்தி:
அதிமுக அமைப்புச் செயலரும், ‘கானா’ என்று பாசத்தோடு அழைக்கப்பட்டவருமான கருப்பசாமி பாண்டியன் உடல்நலக் குறைவால் காலமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். எம்.ஜி.ஆரோடு நெருங்கிப் பழகியவா். ஜெயலலிதாவின் பேரன்பைப் பெற்றவா்.
அதிமுகவில் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டச் செயலா், துணைப் பொதுச்செயலா் உள்ளிட்ட பொறுப்புகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு திறம்பட பணியாற்றியவா். அதேபோல், 3 முறை சட்டப்பேரவை உறுப்பினராக மக்கள் பணிகளை திறம்பட ஆற்றியவா். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் உறவினா்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் எனக் கூறியுள்ளாா்.