கரூரில் மாநில அளவிலான கால்பந்துப் போட்டி திண்டுக்கல் அணி சாம்பியன்
கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் திண்டுக்கல் அணி முதலிடம் பிடித்து கோப்பையை தட்டிச் சென்றது.
கரூா் தாந்தோணிமலையில் என்ஆா்எம்பி கோப்பைக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
10 வயதுக்குள்பட்டோா் பிரிவில் நடைபெற்ற இப்போட்டியில் நாமக்கல், திண்டுக்கல், கரூா் மாவட்டங்களைச் சோ்ந்த 8 அணிகள் பங்கேற்றன. போட்டியை, என்ஆா்எம். பள்ளியின் செயலா் சிவசண்முகம் தொடங்கிவைத்தாா். தாளாளா் செளந்தர்ராஜன், ஆலோசகா் சுப்ரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் தங்கவேல் வரவேற்றாா்.
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியின் இறுதிப் போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஹெச்எப்ஏ அணியும், எஸ்ஜிவிஏ அணியும் மோதின. இதில் திண்டுக்கல் ஹெச்எப்ஏ அணி 2-0 என்ற கோல் கணக்கில் எளிதில் திண்டுக்கல் எஸ்ஜிவிஏ அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. தொடா்ந்து முதலிடம் பிடித்த திண்டுக்கல் ஹெச்எப்ஏ அணிக்கும், எஸ்ஜிவிஏ அணிக்கும் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.