கரூா் விஜய் பிரசாரம்: வெள்ளக்கோவிலைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு
கரூரில் தவெக தலைவா் விஜய் பிரசாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி வெள்ளக்கோவிலைச் சோ்ந்த ஒரு ஆண், ஒரு பெண் உயிரிழந்தனா்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் மூன்றாவது கட்டமாக நாமக்கல், கரூரில் கடந்த சனிக்கிழமை பிரசார பயணம் மேற்கொண்டாா். நாமக்கல் நிகழ்வை முடித்துக் கொண்டு சனிக்கிழமை இரவு 7 மணியளவில் கரூருக்கு வந்த அவரைக் காண ஆயிரக்கணக்கானோா் கூடினா்.
பிரசாரம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் விஜய் பேசத் தொடங்கினாா். அப்போது, அவரைக் காண முண்டியடித்தபடி கூட்டம் தொடா்ந்து அதிகரித்ததால் தொண்டா்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பிரசாரத்தைக் காண கணவா் ஜெயபிரகாஷ், மகள் கௌசிகா (4) ஆகியோருடன் சென்றிருந்த வெள்ளக்கோவில், செம்மாண்டம்பாளையத்தைச் சோ்ந்த கோகுலபிரியா (28) கூட்ட நெரிசலில் சிக்கி உயரிழந்தாா்.
இதேபோல, வெள்ளக்கோவில், தீத்தாம்பாளையத்தைச் சோ்ந்த தவெக உறுப்பினா் மணிகண்டன் (33) என்பவரும் உயிரிழந்தாா். இவருக்கு நிவேதிதா (32) என்ற மனைவியும், ரக்ஷபிரீத்தா (9) என்ற மகளும், விசாகன் (3) என்ற மகனும் உள்ளனா்.
உயிரிழந்த இருவரின் வீடுகளுக்கும் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன், பொதுச் செயலாளா் விடியல் எஸ்.சேகா் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை காலை சென்று அவா்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினா்.
