தாம்பரதத்தில் புதிய மாவட்ட தலைமை மருத்துவமனை: ஆக.5 -இல் முதல்வா் திறந்து வைக்கிற...
கரோனா தடுப்பூசியால்தான் மாரடைப்பு மரணங்கள் ஏற்படுகிறதா? - மருத்துவர் என்ன சொல்கிறார்?
கரோனா காலத்திற்குப் பின் இதயம் தொடர்பான நோய்கள் அதிகரித்து வருவதாகவும் குறிப்பாக இளைஞர்களிடையே இறப்பு அதிகமாகி வருவதாகவும் பேசப்படுகிறது.
கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் ஜூன் - ஜூலை மாதங்களில் 40 நாள்களில் 24 பேர் திடீர் மாரடைப்பால் மரணமடைந்ததும் இதில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்பதும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக கர்நாடக மாநில அரசு ஒரு மருத்துவக் குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளது. கரோனா பாதிப்பு மற்றும் தடுப்பூசிகள்தான் இதற்கு காரணம் என்று பேசப்பட்ட நிலையில் மருத்துவ அமைப்புகள் அதனை மறுத்துள்ளன.
இந்நிலையில் கரோனா தடுப்பூசிகள்தான் திடீர் மரணங்களை ஏற்படுத்துகின்றன என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்று இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) கரோனா தடுப்புக் குழுவின் இணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் ஜெயதேவன் கூறியுள்ளார்.
எனினும் கரோனாவின் தீவிர பாதிப்பிற்கும் அதன்பின்னர் வரும் இதய நோய் பிரச்னைகளுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்தார்.
இதுபற்றிய கேள்விகளும் மருத்துவரின் பதில்களும்...
கரோனா தடுப்பூசிகளை அவசரமாக அங்கீகரித்து விநியோகித்தது ஹசன் மாவட்டத்தில் மாரடைப்பு இறப்புகளுக்கு காரணமாக இருக்கலாம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளது பற்றி...
கரோனா தடுப்பூசி மற்றும் மாரடைப்பு மரணங்கள் பற்றி சமூக ஊடகங்களில் பலவாறாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், கரோனா தடுப்பூசிகளால்தான் இந்த திடீர் மரணங்கள் ஏற்படுகின்றன என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. கரோனா தொற்றுநோய்க்கு முன்பாகவே இளைஞர்களிடையே திடீர் மரணம் என்பது அறியப்பட்ட ஒன்றுதான்.
ஆண்டுதோறும் 35-45 வயதுடைய 1,700 பேரில் ஒருவர் திடீரென இறக்கிறார். இதற்கான காரணங்கள் வேறுபட்டவை. வயதானவர்களில் மாரடைப்பு ஒரு பொதுவான காரணமாகும். அதே நேரத்தில் இளம் மற்றும் நடுத்தர வயதினரின் இதயத்துடிப்பில் பிரச்னை, கார்டியோமயோபதி போன்ற இதய கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பக்கவாதம், தொற்றுகள், நச்சுகள், நுரையீரல் பிரச்னைகளும் இறப்புக்கு காரணமாக இருக்கலாம்.
கரோனா தடுப்பூசிகள் எவ்வளவு பாதுகாப்பானவை?
கரோனா தடுப்பூசிகளின் பாதுகாப்பு இந்தியாவில் மட்டுமின்றி உலகளவிலும் பல்வேறு ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசிகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை செயல்படுத்துகிறது. இந்த அழற்சியின் விளைவு காரணமாக காய்ச்சல், உடல் வலி போன்ற பக்க விளைவுகள் ஏற்படுகிறது.
சில குறிப்பிட்ட தடுப்பூசிகள்தான் மிகவும் அரிதான பக்க விளைவுகளைக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் எம்ஆர்என்ஏ(mRNA) தடுப்பூசிகள், குறிப்பாக இளம் ஆண்களில் 37,000 பேரில் ஒருவர் என்ற விகிதத்தில், மாரடைப்பை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
அடினோவைரஸ் வெக்டர் தடுப்பூசிகள், ரத்தம் உறைதல் மட்டும் ரத்த அணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் விஐடிடி எனும் அரிய நிலையை ஏற்படுத்தலாம். 50,000 - 100,000 பேரில் ஒருவர் இதனால் பாதிக்கப்படலாம்.
மயோகார்டிடிஸ் எனும் இதய தசைகளில் வீக்கம்/அழற்சி முழுமையாக குணமாகக் கூடியது.
அதே நேரத்தில் விஐடிடி நிலை ஆபத்தானது. தடுப்பூசி போட்ட இரு வாரங்களில் இந்த பாதிப்பு ஏற்படும். பல ஆண்டுகளுக்குப் பிறகு எல்லாம் வராது.
இந்தியாவில் திடீர் மாரடைப்பு மரணங்கள் ஏன் நடக்கிறது?
திடீர் மாரடைப்பு மரணங்கள் அனைத்து வயதினரிடமும் இதற்கு முன்னதாக இருந்துள்ளன.
இருப்பினும், இப்போது ஸ்மார்ட்போன்கள், சமூக ஊடகங்களின் பயன்பாட்டினால் உடனடியாக பதிவாகி அது பகிரப்படுகின்றன. எனவே, இது எப்போதும் இருக்கக்கூடியதுதான். மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்கவில்லை என்று பெரும்பாலான இதய நோய் நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.
இருப்பினும், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தடுப்பூசி போடுவதற்கு முன்பு இதய நோய் பாதிப்புகளின் அபாயம் இருந்துள்ளது. இதன் பாதிப்பு 3 ஆண்டுகளுக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது. தனிப்பட்ட அளவில் ஆபத்து மிகவும் குறைவானது. அதனால் யாரும் பீதியடையத் தேவையில்லை.
கரோனா வைரஸுக்கும் மாரடைப்புக்கும் இடையே தொடர்பு உள்ளதா?
திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு கரோனா தடுப்பூசிகள் காரணமாக இல்லை என்றாலும் தீவிரமான கரோனா வைரஸ் பாதிப்புக்கும் இதய நோய்களுக்கும் இடையே தொடர்பு இருக்கிறது.
தீவிரமாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்த சில மாதங்கள் அல்லது ஆண்டுகளில் இதய கோளாறுகளை எதிர்கொள்ளலாம். ஏனெனில் கரோனா வைரஸ், ரத்த நாளங்களின் உள் புறணியை சேதப்படுத்துகிறது. இதுவே பின்னர் மாரடைப்பு உள்ளிட்ட இதய கோளாறுகள், பக்கவாதம், மூளை, நரம்புகளில் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.