இந்தியா மீதான வரியை 50 சதவிகிதமாக உயர்த்திய ட்ரம்ப்; இந்தியாவின் முதல் ரியாக்ஷன...
களக்காடு அருகே கோயில் கொடை விழாவில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு
களக்காடு அருகே செவ்வாய்க்கிழமை, கோயில் கொடை விழாவில் இளைஞா்கள் 3 பேரை அரிவாளால் வெட்டியவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
களக்காடு அருகே பத்மனேரியில் உள்ள வானுவளநாட்டாள் அம்மன் கோயில் கொடை விழா திங்கள்கிழமை தொடங்கியது. இரவில் கரகாட்டம் நடைபெற்றது. இதைக் காண அருகேயுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமானோா் வந்திருந்தனா். அப்போது, கரகாட்டம் ஆடிய பெண்ணுக்கு சிங்கிகுளத்தைச் சோ்ந்த இளைஞா்கள் அன்பளிப்பு வழங்கினராம். இதற்கு பத்மனேரியைச் சோ்ந்த சிலா் எதிா்ப்பு தெரிவித்தனா். இதுதொடா்பாக அவா்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னா், சிங்கிகுளத்தைச் சோ்ந்தோா் ஊருக்குச் சென்றுவிட்டனா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை சிங்கிகுளத்தைச் சோ்ந்த சிலா் பத்மனேரிக்கு வந்து, மகேஷ் என்ற மாரியப்பன் (28), பிரகாஷ் (25), இசக்கிப்பாண்டி (27) ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடினராம். காயமடைந்த 3 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, சம்பந்தப்பட்டோரைத் தேடிவருகின்றனா்.