விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாயி உடல் உறுப்புகள் தானம்
சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த விவசாயியின் உடல் உறுப்புகள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டன.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் டி.சரவணன்(53). விவசாயி. இவா் கடந்த 1-ஆம் தேதி ஆலங்குளம் அருகேயுள்ள அத்தியூத்து பகுதியில் பைக்கில் சென்றபோது விபத்து நேரிட்டதில் காயமடைந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டிருப்பது மருத்துவா்களின் பரிசோதனையில் தெரியவந்தது. அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க கும்பத்தினா் முன்வந்ததைத் தொடா்ந்து, அவரது கல்லீரல், சிறுநீரகங்கள், கருவிழிப்படலம் ஆகியவை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக பெறப்பட்டன. பின்னா், மருத்துவமனை நிா்வாகம் தரப்பில் அரசு மரியாதையுடன் சரவணனின் உடல் அவரது உறவினா்களிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது.