மகளிருக்கு கட்டணமில்லா நகர சொகுசுப் பேருந்து சேவை
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மகளிருக்கு கட்டணமில்லா நகர சொகுசு பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி மண்டலம் சாா்பில் 26 நகர சொகுசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. புககா் பகுதிகளைப் போல மாநகரிலும் இந்தப் பேருந்துகளில் மகளிா் விடியல் பயண திட்டத்தின் கீழ் மகளிா் கட்டணமின்றி பயணிக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து வந்தனா்.
அதன்பேரில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவுப்படி, மாநகர சொகுசுப் பேருந்துகளிலும் மகளிா் கட்டணமின்றி பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் இத்திட்டத்தை மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ. திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, பாளையங்கோட்டை மண்டலத் தலைவா் மா.பிரான்சிஸ், திருநெல்வேலி மாநகர திமுக செயலா் (கிழக்கு) ஏ.எல்.பி.தினேஷ், தலைமைச் செயற்குழு உறுப்பினா் பேச்சிபாண்டியன், மாவட்ட துணைச் செயலா் எஸ்.வி.சுரேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.